செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டம் கோழியாளம் என்ற பகுதியில் பிறந்தவர், தாத்தா என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் இரட்டைமலை சீனிவாசன். பட்டியல் இன மக்களின் மேன்மைக்காகப் பல வழிகளில் பாடுபட்டவர் இரட்டைமலை சீனிவாசன். இதனால் அனைவராலும் மதிக்கப்படும் தலைவராக உள்ளார்.
இவருக்கு இவர் பிறந்த செங்கல்பட்டு மாவட்டத்தில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல நாட்களாக எழுப்பப்பட்டு வந்ததை ஏற்றுக் கடந்த 2018 ஆம் ஆண்டு இவருக்குச் செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அடுத்த அண்ணா நகர்ப் பகுதியில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று அரசு அறிவித்து, அதற்காக ரூ.1.50 கோடி நிதியையும் ஒதுக்கியது. அண்ணா நகர்ப் பகுதியில் இதற்காக ஒரு ஏக்கர் அரசு நிலமும் ஒதுக்கப்பட்டு நினைவு மண்டபம் கட்டப்பட்டது.
மணிமண்டபம் கட்டப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும் அது பொதுமக்களின் பார்வைக்கு இன்னும் திறந்து விடப்படாமல் உள்ளது. மேலும் முறையான பராமரிப்பு இன்றி காணப்படுவதால் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் இது திகழ்ந்து வருகிறது. சுற்றுச்சுவர், வரவேற்பு வளைவு, என எதுவும் இல்லாமல் வெட்ட வெளியில் இருக்கும் இந்த மணிமண்டபத்தை பல்வேறு குற்றச் செயல்களுக்காகச் சிலர் பயன்படுத்தி வருகின்றனர் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.