செங்கல்பட்டு மாவட்டம் படாளம் அடுத்துள்ள கொளம்பாக்கத்தில் காளியம்மாள் என்பவர் வசித்து வந்தார். கணவனை இழந்த இவரின் மகள், சென்னையில் படித்து வருகிறார். இதனால் தனியாக வசித்து வந்த காளியம்மாள், படாளம் அருகே சாலையோரமாக தள்ளு வண்டியில் டிபன் கடை நடத்தி வந்தார். அதேநேரம் அதே பகுதியில் கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் பழைய இரும்புக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்துள்ளார்.
இவருக்கும் காளியம்மாளுக்கும் பழக்கும் ஏற்பட்டு திருமணத்தை மீறிய உறவில் இருந்துவந்துள்ளனர்.அதேநேரம் காளியம்மாளுக்கு குடிப்பழக்கமும் இருந்துள்ளது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்னதாக காளியம்மாள் திடீரென மாயமாகியுள்ளார். இது குறித்து அவரது உறவினர்கள் படாளம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.
இதனையடுத்து காளியம்மாளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் சிவக்குமாரின் பழைய இரும்புக் கடையிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக வந்த தகவலையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர், பூட்டி இருந்த இரும்புக் கடையின் கதவை உடைத்து உள்ளே பார்த்துள்ளனர். அங்கு காளியம்மாள் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில், சாக்கு மூட்டையில் கட்டப்பட்டு சடலமாகக் கிடந்துள்ளார்.