செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்துள்ள கிளியா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன் (54). இவரது வீட்டின் எதிரே ரேவதி என்பவர், அவரது மகள் யுவராணி, மருமகன் முகேஷ் ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர்கள் தினந்தோறும் தங்களது வீட்டின் அருகிலேயே குப்பைகளை எரிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.
இன்றும் வழக்கம்போல் ரேவதி குடும்பத்தினர் தங்களது வீட்டருகே குப்பையை எரித்துள்ளனர். இதன் காரணமாக எதிர்வீட்டிலிருக்கும் பிரபாகரனுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று இரவு பிரபாகரன், ரேவதியின் குடும்பத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
வாக்குவாதம் முற்றவே ரேவதி, யுவராணி, முகேஷ், அவரது சகோதரர் மோகன்ராஜ் மற்றும் கோவிந்தராஜ் ஆகிய ஐந்து பேரும் சேர்ந்து பிரபாகரனை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த பிரபாகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அடித்துக்கொலை செய்யப்பட்ட பிரபாகரன் இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மேல்மருவத்தூர் காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதன்படி முகேஷ் மற்றும் மோகன்ராஜை கைது செய்த காவல் துறையினர், தலைமறைவாகவுள்ள ரேவதி, யுவராணி, கோவிந்தராஜ் ஆகியோரை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:சட்டவிரோதமாக காய்ச்சப்பட்ட சாராய ஊறல் அழிப்பு - காவல்துறை நடவடிக்கை!