கடந்த 6, 9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக இந்த உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில் காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு கடந்த 6ஆம் தேதியன்றும் - ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு கடந்த 9ஆம் தேதியன்றும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.
முதற்கட்டத் தேர்தலில் ஆறு மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு 30 நபர்களும், 61 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு 228 நபர்களும், இரண்டாம் கட்ட தேர்தலில் 5 மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு 34 நபர்களும், 37 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு 156 நபர்களும் போட்டியிட்டனர்.
வாக்கு எண்ணும் மையங்கள்
அதற்கென மாவட்டத்திலுள்ள ஐந்து ஒன்றியங்களில் ஆயிரத்து 781 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவானது நடைபெற்றது. இதில் இரண்டு லட்சத்து 64 ஆயிரத்து 308 ஆண் வாக்காளர்கள், இரண்டு லட்சத்து 69 ஆயிரத்து 224 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் 18 பேர் என மொத்தம் ஐந்து லட்சத்து 34 ஆயிரத்து 530 வாக்காளர்கள் தங்களது வாக்கினைப் பதிவுசெய்தனர்.
பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு...
- காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை பகுதியிலுள்ள அண்ணா பல்கலைக்கழகத்திலும்,
- வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியதிற்கு காஞ்சிபுரம் ஏனாத்தூர் பகுதியிலுள்ள ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும்,
- உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உத்திரமேரூர் அருகே திருப்புலிவனத்திலுள்ள புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அரசினர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும்,
- ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு பென்னலூர்ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியிலும்,
- குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு சிக்கராயபுரம் ஸ்ரீ முத்துகுமரன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும்
வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நான்கு வாக்கு எண்ணிக்கை மையங்களில் காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர் ஆகியவை காஞ்சிபுரம் மாவட்ட காவல் நிலையம் எல்லையிலும் குன்றத்தூர் வாக்கு எண்ணிக்கை மையம் சென்னை பெருநகர காவல் நிலையம் எல்லையில் உள்ளன.
கைப்பேசி வைத்திருக்கு இவர்களுக்கு மட்டுமே அனுமதி
இன்று காலை 8 முதல் மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டு நடைபெற்றுவருகிறது. முதற்கட்டமாக அரசியல் கட்சியினர் முன்னிலையில் பாதுகாப்பு அறை திறக்கப்பட்டு அஞ்சல் வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்றது. முதலில் 302 மேசைகளில் ஆயிரத்து 208 பேர் வாக்குப் பிரித்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.
இதேபோல் ஐந்து ஒன்றியங்களிலும் 569 மேசைகளில் மூன்றாயிரத்து 281 அரசுப் பணியாளர்கள் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்குப் பிரித்தல், வாக்கு எண்ணுதல் எந்தப் பதவி என்பதை அறிந்துகொள்ள வாக்கு எண்ணிக்கை மையம் நுழைவு வாயில், வாக்கு எண்ணிக்கை அறை, வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் டிஜிட்டல் பேனர்கள் மூலம் பார்வை வடிவில் தெரிந்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.