செங்கல்பட்டு:வண்டலூர் அடுத்த கொளப்பாக்கம் பகுதியில், நீர்நிலைப் புறம்போக்கில் காளி கோயில் ஒன்றை அமைத்து சிலர் வழிபட்டு வந்தனர். அப்பகுதி சுற்று வட்டாரத்தில் வசிக்கும் திருநங்கைகள் உள்பட பொதுமக்கள், இந்த கோயிலுக்கு வந்து பூஜை புனஸ்காரங்கள் செய்வது பேய் ஓட்டுவது போன்றவற்றில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் நீர்நிலைப் புறம்போக்கில் இந்த கோயில் கட்டப்பட்டு இருப்பதால், கோயிலை அகற்றுவதற்காக வருவாய்த் துறை உள்ளிட்ட அதிகாரிகள் காவல் துறை பாதுகாப்புடன் இன்று (அக்.16) காலை வந்தனர். கோயிலை இடிக்கக் கூடாது என்று கூறி திருநங்கைகள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு போராட்டம் நடத்தினர்.
ஆனாலும் அவர்களிடம் நீர்நிலைப் புறம்போக்கில் கோயில் இருப்பதை எடுத்துக் கூறிய அதிகாரிகள் கோயிலை இடித்து அப்புறப்படுத்த முயற்சித்தனர். இதனிடையே திடீரென ஆவேச மடைந்த பெண் சாமியார் ஒருவர், காய்ந்த மிளகாயை அரைத்து, அங்கிருந்த சாமி சிலைகள் மீது ஆவேசத்துடன் தெளித்து அபிஷேகம் செய்து, இந்தக் கோயிலை இடிக்கும் அதிகாரிகள் மூன்று நாள்களுக்குள் சுடுகாட்டுக்குச் செல்ல வேண்டும் என்று சாபம் விட்டு அதிகாரிகளை அலறச் செய்தார்.