செங்கல்பட்டு:நடைபெறவிருக்கும்ஊரக உள்ளாட்சி தேர்தலில், செங்கல்பட்டு பகுதியில் போட்டியிடும் பாஜக மற்றும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து நடிகை குஷ்பூ பரப்புரை செய்தார்.
அப்போது அவர், “கடந்த ஏழு ஆண்டுகளில் பேசுவதோடு மட்டுமின்றி தமிழ்நாடு மக்களுக்கு மட்டும் சுமார் ஆறு லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பிரதமர் மோடி ஆட்சியில் மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் அனைத்தும் உங்கள் வீடு தேடி வரும்.
வீடுகளுக்கே சென்று குடிநீர் வழங்கும் ஜல்தன் யோஜனா திட்டம், வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் மக்களுக்காக வழங்கப்பட்டு வருகின்றன.
பரப்புரை மேற்கொண்ட குஷ்பூ தாமரை மலர்ந்தே தீரும்
வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றால், ஒன்றிய அரசின் இந்த திட்டங்கள் அனைத்தும் எளிதில் உங்கள் வீடு தேடி வரும். பாஜக சார்பில் இந்தப் பகுதிக்கு ஒரு மிகச் சிறந்த நபரை தேர்ந்தெடுத்துள்ளோம்.
தமிழ்நாட்டில் தாமரை மலராது என்று கூறினார்கள். ஆனால் இன்றோ தமிழ்நாடு சட்ட சபையில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நான்கு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதையெல்லாம் பார்க்கும்போது தமிழ்நாடு மக்கள் தாமரை மலர்ந்தே தீரும் என்று உறுதியாக உள்ளனர்.
நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தல், மக்களவை தேர்தல் போன்று அல்லாமல், வருகின்ற உள்ளாட்சித் தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதில் எந்த பகுதிக்கு யார் வர வேண்டும் என்று அடித்தட்டு மக்கள் முடிவு செய்வார்கள். இந்த உள்ளாட்சித் தேர்தலில் பொழிச்சலூர் பகுதியில் பாஜக நிச்சயமாக வெற்றி பெறும். அதை என்னால் உறுதியாக சொல்ல முடியும்.
இந்த உள்ளாட்சித் தேர்தலில் பாஜக மற்றும் அதிமுக பிரமுகர்களை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அமோகமாக வெற்றி பெறச்செய்ய வேண்டும். அப்பொழுது தான் ஒன்றிய அரசின் பல்வேறு திட்டங்கள் எளிதில் உங்கள் வீடு தேடி வரும்” என்று கூறினார்.
இதையும் படிங்க: ஒரே மேடையில் விவாதிக்க தயாரா? எச். ராஜாவுக்கு சீமான் கேள்வி