செங்கல்பட்டு:சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டார். இந்நிலையில், சிவசங்கர் பாபாவை கைது செய்யாமல் இருக்க கட்சி மேலிடத்தில் பேசுவதாக, மூன்று கோடி ரூபாயை கே.டி. ராகவன் பெற்று ஏமாற்றியதாக சிவசங்கர் பாபா அறநெறி இயக்கம் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர், செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் புகார் அளித்துள்ளது.
அந்தப் புகாரில், "குழந்தைகள் நல உரிமை ஆணையம் பாபாவுக்கு நோட்டீஸ் அனுப்பியபோது, பாபாவை காப்பாற்ற நாங்கள் போராடினோம். அப்போது, பாபாவின் வழக்கை கே.டி. ராகவன் பார்த்துக்கொள்வார் என ஆசிரம நிர்வாகி ஜானகியிடம் மீனாட்சி ராகவன் உறுதியளித்தார்.
அமித்ஷா மேஜையில் பாபா கோப்பு
உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திடம் வழக்கு தொடர்பாக பேசியுள்ளோம். பாபாவின் வழக்கு கோப்புகள் அமித்ஷாவின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. பாபா கைது செய்யப்படமாட்டார் என கே.டி.ராகவன் உறுதியளித்து மூன்று கோடி ரூபாயை சிவசங்கர் பாபாவின் ஆசிரமத்திலிருந்து வாங்கினார்.
ஜூன் 16ஆம் தேதி பாபா கைது செய்யப்பட்டபோது, மூன்றே நாட்களில் பாபா திரும்ப வந்துவிடுவார் என பாபாவின் சீடர்களிடம் மீனாட்சி ராகவன் தெரிவித்தார். போக்சோ சட்டத்தின் கீழ் பாபா கைது செய்யப்பட்டபோது, அவர் மூன்று நாள்களில் திரும்பவருவது கடினம் என்பது தெரியவந்தது. தொடர்ச்சியாக பொய்கூறி பாபாவின் பக்தர்களை மீனாட்சி ராகவன் தவறாக வழிநடத்திவந்தார்.
24மணிநேரமும் ஆசிரமத்தில் தங்கும் கே.டி. ராகவன் கும்பல்
கடந்த 60 நாட்களாக கே.டி. ராகவனை பிரதிநிதித்துவப்படுத்தும் சசிக்குமார் என்பவர் தலைமையிலான கும்பல் 24 மணிநேரமும் ஆசிரமத்தில் தங்கியுள்ளனர். பிரமணரல்லாதார், கோயிலுக்குள் நுழையவிடாமல் அவர்கள் தடுத்துவருகின்றனர்.