தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆன்லைன் கடன் செயலியால் கிருஷ்ணகிரி இளைஞர் தற்கொலை!

செங்கல்பட்டு அருகே, ஆன்லைன் கடன் செயலியில் வாங்கிய கடனை திரும்பச் செலுத்த முடியாததால், தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த கிருஷ்ணகிரி இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்.

private
ஆன்லைன்

By

Published : Apr 18, 2023, 3:44 PM IST

செங்கல்பட்டு: கிருஷ்ணகிரி‌ மாவட்டம், சின்ன பெல்லாரம்பள்ளி பகுதியைச்சேர்ந்தவர், கிருஷ்ணன். இவர் மத்திய காவல் படையில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கு இரு மகன்கள் உள்ளனர். மூத்த மகனான வசந்த் (22), பொறியியல் படிப்பு முடித்துவிட்டு, செங்கல்பட்டு அடுத்த பள்ளியகரம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அந்நிறுவனத்தின் அருகே உள்ள விடுதியில் வசந்த் தங்கியிருந்தார். அவருடன் விடுதியில் தங்கியிருந்த சக ஊழியர்கள், தமிழ்ப் புத்தாண்டையொட்டி சொந்த ஊர்களுக்குச் சென்றனர்.

இந்த நிலையில், அறையில் தனியாக இருந்த வசந்த் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிகிறது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், வசந்தின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், வசந்த் ஆன்லைன் கடன் செயலியில் கடன் வாங்கியிருந்ததாகவும், அதைத் திருப்பி செலுத்த முடியாததால் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரியவந்துள்ளது. வசந்த் தற்கொலை செய்வதற்கு முன்பு, அவரது செல்ஃபோன், சிம் கார்டு உள்ளிட்டவற்றை உடைத்து தூக்கி எறிந்ததாகவும் தெரிகிறது.

ஆன்லைனில் வாங்கிய கடனை செலுத்துவதற்காக, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சிறு சிறு தொகையாக பெற்றோரிடமிருந்து ஒரு லட்சம் ரூபாய் வரை வாங்கியதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களில் பணத்தை இழந்த இளைஞர்கள் பலர் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து வந்தன. இதைத் தடுப்பதற்காக தமிழக அரசு ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்டம் கொண்டு வந்துள்ளது. சில இளைஞர்கள் ஆன்லைன் சூதாட்டங்களை விளையாடுவதற்காகவும் ஆன்லைன் கடன் செயலில் கடன் வாங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மதுரையில் விஷம் குடித்து தற்கொலை செய்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு - ஆர்டிஐ மூலம் அம்பலமான பகீர் தகவல்!

ABOUT THE AUTHOR

...view details