தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

லாரி மீது அரசு பேருந்து மோதிய விபத்து- மேலும் ஒருவர் உயிரிழப்பு... ஒட்டுநர் கைது - மதுராந்தகம் பேருந்து விபத்துக்கு ஸ்டாலின் இரங்கல்

மதுராந்தகம் அருகே நடந்த பேருந்து விபத்தில் ஆறு பேர் உயிரிழந்த நிலையில் இன்று மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து பேருந்து ஓட்டுநரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

ஒட்டுநருக்கு சிறை
ஒட்டுநருக்கு சிறை

By

Published : Jul 10, 2022, 9:53 AM IST

செங்கல்பட்டு: சென்னையில் இருந்து சிதம்பரம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து, கடந்த இரு நாள்களுக்கு (ஜூலை 8) முன் மதுராந்தகம் அடுத்த தொழுப்பேடு அருகே பயங்கர விபத்துக்குள்ளானது. இதில் ஆறு பயணிகள் உயிரிழந்தனர்.

அன்றைய தினம் காலை 9 மணியளவில் அந்த இடத்தில் அரசுப் பேருந்து சென்றபோது, சாலையின் இடது ஓரமாக இரும்புத் தளவாடங்களுடன் முன்னால் சென்ற ட்ரெய்லர் லாரியின் மீது அசுர வேகத்தில் மோதியதில், பேருந்தின் இடது பக்கம் முற்றிலும் சேதம் அடைந்தது. இந்த கோர விபத்தில் ஆறு பயணிகள் உயிரிழந்தனர். இந்த விபத்து நாடெங்கிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி இறந்த பயணிகளின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் இறந்தவர்கள் குடும்பத்திற்கு நிவாரணத் தொகை அறிவித்தார். இந்நிலையில் விபத்தில் காயமடைந்து சிகிச்சைப் பெற்றுவந்த மேலும் ஒருவர் சிகிச்சைப் பலனின்றி இன்று (ஜூலை10) காலை உயிரிழந்தார்.

இதனையடுத்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அரசுப் பேருந்தை ஓட்டியவர், கடலூர் மாவட்டம் கீழக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த 44 வயதான முரளி என்பது தெரியவந்தது. இவர் 2007ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் துறையில் பணியில் சேர்ந்தவர். சம்பவத்தன்று இவர் அலட்சியமாக பேருந்தை இயக்கியதால்தான் விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.

பெரும்பாலும் அரசுப் பேருந்துகள் சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழப்பே ஏற்பட்டாலும், ஓட்டுநர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. அரசுப் போக்குவரத்து கழகத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் வேறு பல காரணங்களாலும் பேருந்து ஓட்டுநர்கள் மீது கடும் நடவடிக்கை தவிர்க்கப்படும்.

ஆனால் இந்த சம்பவத்தில் ஓட்டுநரின் அலட்சியம், அப்பட்டமாக பொதுமக்களுக்கு தெரியும் அளவிற்கு நிலைமை இருந்தது. மேலும் பிரதமரே இரங்கல் தெரிவிக்கும் அளவிற்கு இந்த விவகாரம் சென்றடைந்தது. இதனால் விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் முரளி மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: லாரி மீது அரசு பேருந்து மோதி பயங்கர விபத்து - 6 பேர் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details