செங்கல்பட்டு: தேசிய நெடுஞ்சாலைகளில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்களில் லட்சக்கணக்கான மக்கள் பயணித்து வருகின்றனர். நெடுஞ்சாலைகளில் பல இடங்களில் உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. புகழ்பெற்ற உணவகங்களின் கிளைகள், அந்தந்த வட்டாரங்களில் பெயர்பெற்ற உணவகங்கள், சாதாரண உணவகங்கள் என பல உணவகங்கள் நெடுஞ்சாலைகளின் ஒரம் கோலோச்சி வருகின்றன.
நெடுஞ்சாலையில் பயணிக்கும் மக்கள், இந்த உணவகங்களில் உணவருந்த வருகின்றனர். பல வகைகளில் கிடைக்கும் உணவுகளை உண்கின்றனர். பெரும்பாலான இத்தகைய உணவகங்கள், உணவருந்த மட்டும் என்று இல்லாமல், சற்றே இளைப்பாறி பொழுதுபோக்கவும் உதவுகின்றன. உணவகங்களின் பிரமாண்டத்தில், உணவு வகைகளின் சுவையில் மகிழும் நாம், பல உணவகங்களிலும் காணப்படும் சில பாவப்பட்ட மனிதர்களை கவனிக்கத் தவறுகிறோம்.
சாலைகளில் பயணிக்கும் பொழுது நமது கவனத்தை ஈர்த்து, தாங்கள் பணிபுரியும் உணவகத்திற்கு நம்மை வரவேற்கும் விதமாக கொடியசைத்துக் கொண்டு நிற்கும் மனிதர்கள் தான் அவர்கள். சில உணவகங்கள் தவிர்த்து பெரும்பாலான உணவகங்கள், இத்தகைய மனிதர்களை பணிக்கு வைத்துள்ளனர். வெயிலோ மழையோ, கால்கடுக்க நெடுஞ்சாலையோரம் நின்று, இயந்திரத்தனமாக கொடியை அசைத்துக் கொண்டு நிற்கும் இவர்களை எத்தனை பேர் கவனித்திருப்போம்?.
நம்முடைய பயண பரபரப்பு, பசி களைப்பு போன்றவற்றில் அவர்களை மனதில் நிறுத்தி இருக்கமாட்டோம். ஒரு வேளைக்கு பலநூறு செலவழித்து உணவகங்களில் உண்ணும் நாம், அந்த கொடிகாத்த குமரனின் ஒருநாள் வருமானம், நாம் ஒரு வேளைக்கு செலவழித்த உணவுக்கான பணத்தில் பாதி கூட இருக்காது என்பது எத்தனை பேருக்குத் தெரியும். 6000 முதல் 8000 வரையான மாத சம்பளத்திற்கு, இவர்கள் கொடியசைத்து நம்மை வரவேற்கின்றனர். பெரும்பாலான உணவகங்களில் இவர்களுக்கு அடிப்படை வசதிகள் கூட செய்து கொடுக்கப்படவில்லை என்பது கொடுமையான உண்மை.
ஒரு சில இடங்களில், ஒரு கையில் சிறு குடையும், மறுகையில் கொடியுமாக பரிதாபமாக நிற்கின்றனர். பல இடங்களில் வெட்டவெளியில் நின்று தான் கொடியசைத்துக் கொண்டுள்ளனர். பல மணி நேரம் கால்கடுக்க நின்று கொண்டிருக்கும் இவர்களுக்கு, ஓய்வெடுக்கும் வகையிலோ சிறிது உட்காரும் வகையிலோ ஒரு நாற்காலி கூட வழங்கப்படுவதில்லை. இத்தகைய பணிக்கு பெரும்பாலும் சற்றே வயதான நபர்கள் தான் வருவார்கள் என்பதால், இதன் வீரியம் மனசாட்சி உள்ளவர்களை உலுக்கவே செய்யும்.