திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், மதுராந்தகத்திற்கு அருகில் உள்ளது, செங்கல்பட்டு மாவட்டத்திற்கு பன்னாட்டு அளவில் பெருமை சேர்க்கும் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம். உலகின் பல நாடுகளிலிருந்தும், கண்டங்களிலிருந்தும் பலவித பறவைகள், பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் பறந்து வந்து இங்கு குவிவது, ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தில் தொடங்கும் நிகழ்வாகும்.
இங்குள்ள ஏரியில் உள்ள நீர்க்கடம்பை மரங்கள், பறவைகள் கூடுகட்டி வாழத் தேவையான வடிவமைப்பையும், இலகுவான அதேசமயம் உறுதியான மரக் குச்சிகளையும் கொண்டுள்ளதே இதற்குக் காரணம். மேலும், இக்கிராமத்தைச் சுற்றியுள்ள வயல்கள், ஏரிகள் இங்கு வரும் பறவைகளுக்கு உணவளிக்கும் ஆதாரங்களாக விளங்கி வருகின்றன.
இங்கு வருகை தரும் பறவைகள் சில மாதங்கள் தங்கி குஞ்சு பொறித்து, பின்னர் தங்கள் குஞ்சுகளுடன் தாய்நாடு திரும்பும். உலகின் பல நாடுகளைச் சேர்ந்த பறவைகளைக் கண்டு ரசிக்க, ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் நாள்தோறும் சரணாலயத்திற்கு வருகை தருவர். இவர்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டினர் என்பதால், இச்சிறிய கிராமம் தமிழகத்திற்கு குறிப்பாக செங்கல்பட்டு மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் தனி அடையாளமாக விளங்கி வருகிறது.
தற்போது பெய்து வரும் மழையால் சரணாலயம் அமைந்துள்ள ஏரி முழுவதும் நிரம்பி, இன்றைய நிலவரப்படி, சுமார் 15 ஆயிரம் பறவைகள் பல நாடுகளிலிருந்தும் வந்து இங்கு கூடு கட்டியுள்ளன. நத்தை கொத்தி நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன் போன்ற அபூர்வ பறவைகளும் வந்துள்ளன.
இத்தகைய பெருமை வாய்ந்த சரணாலயம் காலப்போக்கில் சிறுக சிறுக அழியும் நிலை ஏற்படலாம் என, சூழல் ஆர்வலர்களும், உயிரின ஆர்வலர்களும் வருந்துகின்றனர். பறவைகளின் பாதுகாப்பு கருதி வேடந்தாங்கலைச் சுற்றி, ஏறத்தாழ 5 கிமீ பரப்பளவை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்துள்ள நிலையில், சில மாதங்களுக்கு முன்பு இந்தப் பரப்பளவை 2 கிமீ அளவிற்கு மட்டுமே இருக்குமாறு சுருக்க அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருந்தது பலரையும் பதற வைத்தது.