”விஜய்யை ஒரே ஒரு தடவ பாக்கணும்”... நடிகர் விஜய்யின் பூட்டிய வீட்டின் முன் கெஞ்சி அழுத பள்ளி மாணவி!! காஞ்சிபுரம்: ஐயங்கார் குளம் பகுதியைச் சேர்ந்த சங்கர் மற்றும் இந்திரா தம்பதியினருக்கு 16 வயது நிரம்பிய தமிழ்ச்செல்வி என்ற மகள் உள்ளார். இவர் காஞ்சிபுரத்தில் உள்ள பள்ளி ஒன்றில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சங்கர், தனது குடும்பத்தினருடன் கிழக்கு கடற்கரைச் சாலைக்கு சென்றுள்ளார்.
அங்கு பொழுதைக் கழித்த அவர்கள் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள விஜய்யின் வீட்டிற்குச் சென்றுள்ளனர். அப்போது நடிகர் விஜய்யின் வீடு பூட்டப்பட்டிருந்தது. இதனால் பூட்டிய வீட்டின் முன் நின்று கொண்டு மாணவி தமிழ்ச்செல்வி, விஜயை ஒரே ஒரு முறை பார்க்க வேண்டும் என்றும், அதற்கு உதவி புரியுமாறும் வேண்டுகோள் விடுத்து, கைகூப்பி, கெஞ்சி அழுத காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
நடிகர் விஜய் வீட்டின் முன் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராவைப் பார்த்து, இரு கையை கூப்பிக்கொண்டு, எப்படியாவது ஒரு முறை உங்களைப் பார்க்க வேண்டும் என்று தமிழ்ச்செல்வி கதறுகிறார். மேலும், ஓடிச்சென்று விஜய்யின் பூட்டப்பட்ட பிரமாண்டமான வீட்டின் கேட்டை கட்டிப்பிடிக்க முயற்சி செய்கிறார். தான் கைகூப்பி கெஞ்சும் வீடியோவை ஷேர் செய்யுமாறு அனைவருக்கும் வேண்டுகோள் விடுக்கிறார்.
மாணவி தமிழ்ச்செல்வி மற்றும் அவரது பெற்றோர் போன்றோரின் இத்தகைய செயல் சமூகத்தில் தவறான முன்னுதாரணம் ஆகி, அனைத்து மாணவ மாணவிகளையும் கடுமையாகப் பாதிக்கும் என்று சமூக ஆர்வலர்கள் கொதிப்புடன் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: நீச்சலில் அலைபாயும் நடிகர் மாதவனின் மகன் - நாட்டுக்காக 5 தங்க பதக்கங்கள் வேட்டை!