செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைச்சர் விஜய பாஸ்கர் கரோனா தொற்று நோய் வார்டில் திடீர் ஆய்வுமேற்கொண்டார். இதில் மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன், மருத்துவக்கல்லூரி முதல்வர் சாந்தி மலர், சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
மேலும் அமைச்சர் மருத்துவர்களிடம் படுக்கை வசதிகள், ரோபாடிக் மருத்துவ முறைகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் தொற்றுநோய் வார்டில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளிடம் காணொலி வாயிலாக மருத்துவர்களின் சிகிச்சை, உடல்நலம் பற்றி விசாரித்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோருக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளித்துவரும் செவிலியர், மருத்துவர்கள், மருத்துவமனையில் பணியாற்றும் அனைவருக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். தற்போது செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 300 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.
முதலமைச்சரின் கடுமையான முயற்சியால் தமிழ்நாட்டில் 58 இடங்களில் மருத்துவப் பரிசோதனைக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் 24 மணிநேரத்தில் பரிசோதனை முடிவுகளைத் தெரிந்துகொள்ள முடிகிறது.
மேலும் நோயாளிகளை அடையாளப்படுத்துதல், அவர்களைக் கண்காணித்தல் போன்றவைகளில் காவல் துறையினரின் பணி சிறப்பாக உள்ளது. இந்திய அளவில் தமிழ்நாட்டில்தான் உயிரிழப்பு விகிதம் 0.67 என்ற மிகக் குறைந்த அளவில் உள்ளது.