செங்கல்பட்டு: தமிழ்நாடு காவல்துறையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்மார்ட் காவலர் செயலி, நேற்று நவம்பர் 11 அன்று, செங்கல்பட்டு மாவட்டத்தில் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் மேற்பார்வையில், 3 உட்கோட்டங்களில் இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் ஸ்மார்ட் காவலர் செயலி என்பது இதன் தனிச்சிறப்பாகும்
மூன்று உட்கோட்டங்களில் உள்ள ஒரு காவல் நிலையத்தை முன்னோட்டமாக கொண்டு இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி செங்கல்பட்டு நகர காவல் நிலையம், மாமல்லபுரம் காவல் நிலையம், மதுராந்தகம் காவல் நிலையம் ஆகிய காவல் நிலையங்களில் இது அறிமுகப்படுத்தப்பட்டது.
மேற்கண்ட பகுதிகளில் இரவு மற்றும் பகல் ரோந்து செல்லும் காவல்துறையினர், தங்கள் ஆண்ட்ராய்டு போனில் குறிப்பிட்ட செயலின் மூலமாக, தாங்கள் ரோந்து செல்லும் பகுதியில் உள்ள பூட்டப்பட்டுள்ள வீடுகள், வங்கிகள், ஏடிஎம்கள் போன்ற முக்கிய இடங்களைப் பற்றிய தகவல்களை பதிவேற்றம் செய்வர். அதோடு மட்டுமல்லாமல் அந்தந்த சரகங்களில் உள்ள கெட்ட நடத்தைக்காரர்கள், வரலாற்றுப் பதிவேடு குற்றவாளிகள் போன்றவர்கள் பற்றிய தகவல்களும் இந்த செயலியில் உடனுக்குடன் பதியப்படும்.