சென்னை பூந்தமல்லியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் தனது மனைவி இந்திராணி, உறவினர்கள் மகாலட்சுமி, சாந்தி ஆகியோருடன் மேல்மலையனூர் கோயிலுக்கு காரில் சென்றுவிட்டு இன்று (பிப். 9) அதிகாலை சென்னை திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அத்திமனம் என்ற இடத்தில், முன்னால் சென்ற லாரியின் மீது கார் மோதியது.
இதில், கார் சுக்குநூறாக நொறுங்கியது. காரில் பயணித்த சுப்பிரமணி, இந்திராணி, மகாலட்சுமி, சாந்தி, கார் ஓட்டுநர் ஆகிய ஐந்து பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த படாளம் காவல் துறையினர், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை நடத்திவருகின்றனர்.