செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்குள்பட்ட கீரப்பாக்கம் ஊராட்சியில், பல மாதங்களாக குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படாததால் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.
மேலும், அடிக்கடி மோட்டார் பழுதாவதால் பல பகுதிகளில் சரிவர குடிநீர் விநியோகம் செய்வதில்லை என்றும், இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் பலமுறை புகார் கூறியும் கண்டுகொள்ளவில்லை என்றும், பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதற்கிடையில், "கடந்த ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி தொட்டி மாரியம்மன் கோயில் தெரு என்ற பகுதியில் சின்டெக்ஸ் தொட்டியில் தண்ணீர் நிரப்புவதற்காக அங்குள்ள சுவிட்ச் போட்டபோது, அப்பகுதியை சேர்ந்த அலமேலு என்ற மூதாட்டி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
அப்போது துண்டிக்கப்பட்ட மின் இணைப்பு இதுவரை பொருத்தப்படவில்லை. இதில் சின்டெக்ஸ் தொட்டி இடமாற்றம் செய்வதற்காக அங்கன்வாடி மையம் அருகில் ஆரம்பிக்கப்பட்ட பணி கடந்த எட்டு மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.