செங்கல்பட்டு: கூடுவாஞ்சேரி அடுத்த அருங்கல் பகுதியில் இன்று அதிகாலை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அதிவேகமாக வந்த கார் ஒன்று போலீஸ் வாகனம் மீது மோதி நின்றது. இதனை அடுத்து, காரை சுற்றி வளைத்த போலீசார் உள்ளிருந்த மர்மநபர்களைப் பிடிக்க முயற்சி செய்தனர்.
அப்போது காரில் இருந்த நான்கு மர்ம நபர்கள் பயங்கர ஆயுதங்களுடன் காரில் இருந்து இறங்கி போலீசாரை வெட்ட முயற்சித்துள்ளனர். அச்சமயத்தில், உதவி ஆய்வாளர் சிவகுருநாதனை இடது கையில் ரவுடிகள் வெட்டிவிட்டு மீண்டும் தலையில் வெட்ட முயற்சித்துள்ளனர். இதனை சுதரித்த அவர், உடனடியாக குனிந்ததால் தொப்பியில் வெட்டு விழுந்து உள்ளது. இதில் நூலிழையில் அவர் உயிர் தப்பி உள்ளார்.
பின்னர் காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டதில் இரண்டு ரவுடிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மற்ற இரண்டு ரவுடிகள் அங்கிருந்து தப்பி ஓடிள்ளனர். அவர்களைத் தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ரவுடிகள் வெட்டியதில் படுகாயம் அடைந்த உதவி ஆய்வாளர் சிவகுருநாதன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். மேலும், அவரை தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்தார்.
இதனைத் தொடர்ந்து தமிழக காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று, வெட்டு காயம் அடைந்த காவல் உதவி ஆய்வாளர் சிவகுருநாதனை சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் மருத்துவரிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.