கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சித்த மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கான வசதிகளை மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியது. மாநிலத்தில் பல்வேறு இடங்களில் கரோனா சிகிச்சைக்காக சித்த மருத்துவமனைகள் தொடங்கப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக செங்கல்பட்டு அருகே தண்டரையில் உள்ள ஆசான் பொறியியல் கல்லூரியில் 150 படுக்கை வசதிகளுடன் சித்த மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. அதனை ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் குத்துவிளக்கு ஏற்றிவைத்து திறந்துவைத்தார்.
இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், திருப்போரூர் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான்லூயிஸ், மாவட்ட சுகாதாரத்துறை துணை ஆணையர் பிரியா, திமுகவினர், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். பின்பு, பொது மக்கள், மாற்றுத்திறனாளிகளுக்குக் கரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டதை அமைச்சர் பார்வையிட்டார். ஊரடங்கு காலத்தில் வீட்டிற்கே காய்கறிகள் கொண்டு வந்து கொடுக்கும் வகையில் நடமாடும் காய்கறி வாகனத்தை கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பரசன் கூறியதாவது ," சித்த மருத்துவமனை தொடங்கப்பட்டதன் நோக்கம் கரோனா தொற்று உறுதியாகி, ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்படும். ஆக்ஸிஜன் தேவைப்படும் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் வகையில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் அரசு, தனியார் மருத்துவமனைகள் சேர்த்து மொத்தமாக 5,066 படுக்கைகள் உள்ளன. இதில் 3,302 ஆக்ஸிஜன் படுக்கை வசதியுடன் உள்ளது.