செங்கல்பட்டு:தமிழ்நாடு அரசின் மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறையின் 'மக்களைத் தேடி மருத்துவம்' என்ற திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகஸ்ட் 8ஆம் தேதியன்று தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தில், பயனாளிகளின் இல்லங்களுக்குச் சென்று முக்கியமான மருத்துவ சேவைகள் வழங்கப்படுகின்றன.
45 வயதிற்கும் மேற்பட்ட உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோயாளிகளுக்கான மருந்துகளை அவரவர் இல்லங்களில் வழங்குதல், நோய் ஆதரவு, இயன்முறை சிகிச்சை சேவைகள் வழங்குதல், சிறுநீரக நோயாளிகளுக்கு சுய டயாலிசிஸ் செய்துகொள்வதற்குத் தேவையான பைகளை வழங்குதல், அத்தியாவசிய மருத்துவ சேவைகளுக்கான பரிந்துரை போன்ற பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன.
இத்திட்டத்தின் கள அளவிலான குழுவில், பெண் சுகாதார தன்னார்வலர்கள், நோய் ஆதரவு சிகிச்சை செவிலியர், இயன்முறை மருத்துவர்கள், இடைநிலை சுகாதாரச் சேவையாளர்கள் ஆகியோர் இடம் பெறுவர். பொதுச் சுகாதார துறையின் களப்பணியாளர்கள் இக்குழுவினரின் செயல்பாடுகளைக் கண்காணித்து வழிநடத்துவார்கள்.
இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சித்தாலப்பாக்கத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு 188 அவசர ஊர்திகளை மக்கள் பயன்பாட்டிற்காகக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.