சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வருவதையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பரப்புரை செய்து வருகிறார். அந்த வகையில், ஜனவரி 21ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்தில் பரப்புரை மேற்கொள்ள இருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன.
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஜன.21இல் முதலமைச்சர் பரப்புரை - முதலமைச்சர் பழனிசாமி பரப்புரை
செங்கல்பட்டு: திருப்போரூர், செய்யூர், மதுராந்தகம் ஆகிய தொகுதிகளில் ஜனவரி 21ஆம் தேதி முதலமைச்சர் பழனிசாமி பரப்புரை மேற்கொள்ள இருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன.
அதன்படி, செங்கல்பட்டு மாவட்டத்துக்கு வருகை தரும் முதலமைச்சர், திருப்போரூர், செய்யூர், மதுராந்தகம் ஆகிய தொகுதிகளில் பரப்புரை மேற்கொள்ள இருக்கிறார். இதனால், இந்த மூன்று தொகுதிகளில் உள்ள அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், போட்டியிட விரும்புவோர் பரபரப்புடன் காணப்படுகின்றனர்.
அதிமுக தலைமையிடம் தங்களது செல்வாக்கையும், பலத்தையும் காட்ட நிர்வாகிகள் முனைப்பு காட்டி வரும் வேளையில், பின்தங்கிய தொகுதிகளாக உள்ள செய்யூர், மதுராந்தகம் பகுதிக்கு ஏதேனும் வாக்குறுதி கிடக்குமா என வாக்காளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
செய்யூரை பொறுத்தவரை, கிணற்றில் போட்ட கல்லாக கிடக்கும் செய்யூர் அனல் மின் திட்டம், ஆலம்பரை கோட்டை பகுதியில் மீன்பிடி துறைமுகம் அமைக்க வேண்டும் என்ற நீண்டநாள் கோரிக்கை குறித்து முதலமைச்சர் அறிவிப்பாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. மதுராந்தகம் தொகுதியை பொறுத்தவரை, இங்கு அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும் என்பது, அனைவரின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.