செங்கல்பட்டு மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த யுவராஜ், தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். இவர், செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த சங்கீதா என்ற பெண் காவலரை காதலித்து திருமணம் செய்ததாகத் தெரிகிறது. ஆனால், சங்கீதாவுக்கு ஏற்கெனவே திருமணமாகி 8 வயதில் மகன் உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே சங்கீதா புருஷோத்தமன் என்ற நபரை காதலித்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து யுவராஜுக்கும் சங்கீதாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனிடையே யுவராஜ் தன்னை துன்புறுத்துவதாக சங்கீதா செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இரு மாதங்களுக்கு முன்பு புகார் அளித்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த யுவராஜ் சங்கீதாவை விட்டு பிரிந்து சென்னையில் இருந்துவந்துள்ளார்.
அண்மையில் சங்கீதாவுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து யுவராஜ் செங்கல்பட்டில் வந்து தங்கியிருந்துள்ளார். இந்நிலையில் நேற்று விஷம் அருந்திவிட்டு மயக்க நிலையில், செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே யுவராஜ் இருந்துள்ளார். அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தபோதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தனது சாவுக்கு மனைவி சங்கீதா, அவரது காதலன் புருஷோத்தமன், சங்கீதாவுடன் பணியாற்றிய மூன்று காவலர்கள்தான் காரணம் என யுவராஜ் கடிதம் எழுதி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதனடிப்படையில், சங்கீதா மற்றும் யுவராஜ் குறிப்பிட்டுள்ள மூவரை கைது செய்யும் வரை யுவராஜின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், செங்கல்பட்டு மதுராந்தகம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க:13 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 65 வயது முதியவர் கைது!