செங்கல்பட்டு மாவட்டம் படாளத்தில் கூட்டுறவுச் சர்க்கரை ஆலை ஒன்று இயங்கிவருகிறது. இங்கு, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விளைவிக்கப்படும் கரும்புகளை, விவசாயிகள் அரவைக்குக் கொண்டுவருகின்றனர். இப்பகுதியில், உதயம்பாக்கத்தை படாளத்தோடு இணைக்கும் பழைமையான தரைப்பாலம் ஒன்று இருந்துவந்தது.
இந்தப் பாலத்தின் வழியே, உதயம்பாக்கம், ஈசூர், வல்லிபுரம், திருக்கழுக்குன்றம், பொன்விளைந்த களத்துார், ஒட்டிவாக்கம் உள்ளிட்ட 20 கிராமத்திற்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள், கரும்பு ஆலைக்கு, கரும்புகளை ஏற்றிச் செல்வது வழக்கம். இந்தப் பாலம் 2015ஆம் ஆண்டு பெய்த கனமழையில் அடித்துச் செல்லப்பட்டது.
"உதயம்பாக்கத்திலிருந்து, படாளத்திற்கு இந்தத் தரைப்பாலத்தின் வழியே சென்றால், வெறும் 3 கிலோ மீட்டர்தான். ஆனால், தற்போது தரைப்பாலம் இல்லாததால், செங்கல்பட்டு வழியாக ஏறத்தாழ, 20 கிலோ மீட்டர் சுற்றிக்கொண்டு கரும்புகளை அரவைக்குக் கொண்டுசெல்ல வேண்டிய சூழலுக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளோம்.