தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எஸ்பியின் நடவடிக்கையால் காப்பாற்றப்பட்ட பெண் காவலர் - chengalpattu lady police issue

செங்கல்பட்டு மாவட்டத்தில் தேவையற்ற பணிச்சுமை திணிக்கப்பட்டதால் மன அழுத்தத்திற்கு ஆளான பெண் காவலர் தற்கொலை முடிவெடுத்ததை அடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் சரியான நேரத்தில் நடவடிக்கை மேற்கொண்டு அப்பெண் காவலர் உயிரைக் காப்பாற்றியுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன்

By

Published : Dec 9, 2021, 2:54 PM IST

செங்கல்பட்டு: கல்பாக்கம் காவல் நிலையத்தில், பெண் காவலர் ஒருவர் பணிபுரிந்துவந்துள்ளார். இவருக்கு அங்குள்ள சில காவலர்கள் வேண்டுமென்றே பணி நெருக்கடி கொடுத்துவந்ததாகக் கூறப்படுகிறது.

தேவையின்றி வேறு காவல் நிலைய பணிகளுக்கு இவரை அமர்த்தி, மன உளைச்சலை உண்டாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் பெரும் மன அழுத்தத்துக்கு உள்ளான அந்தப் பெண் காவலர், சமீபத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தனுக்கு தன்னுடைய மன உளைச்சல் பற்றி கடிதம் எழுதி, தான் உயிரை மாய்த்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்று அறிவித்துவிட்டு காணாமல்போனதாகக் கூறப்படுகிறது.

இதனால், அதிர்ச்சியடைந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன், உடனடியாகச் சம்பந்தப்பட்ட காவல் நிலைய காவலர்களையும், காவல் துறையையும் முடுக்கிவிட்டு, அந்தப் பெண் காவலரை உடனடியாகக் கண்டுபிடித்து தன் அலுவலகத்திற்கு அழைத்துவர உத்தரவிட்டார்.

அந்தப் பெண் காவலருக்கு ஏதேனும் நேர்ந்தால், சம்பந்தப்பட்ட காவலர்கள் பதிலளிக்க வேண்டியிருக்கும் என்றும் எச்சரித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆடிப்போன காவல் துறையினர், உடனடியாகத் தேடுதல் வேட்டையில் இறங்கி கல்பாக்கம் கடற்கரையோரம் சென்றுகொண்டிருந்த குறிப்பிட்ட பெண் காவலரைத் தடுத்து நிறுத்தி அழைத்துவந்தனர்.

அந்தப் பெண் காவலருக்கு ஆறுதல் கூறிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர், தேவையான ஓய்வு எடுத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தியும், தேவைப்பட்டால் மன அழுத்தத்திற்கான சிகிச்சை மேற்கொள்ளவும் அறிவுறுத்தி, விடுப்பில் அனுப்பியுள்ளார். மேலும், குற்றச்சாட்டுக்குள்ளான காவலர்களிடம் விசாரணை மேற்கொண்டுவருகிறார் என்றும் கூறப்படுகிறது.

குறிப்பிட்ட பெண் காவலர், தன்னுடைய மனஅழுத்தம் குறித்து வேறு சில உயர் அலுவலர்களிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லாததால், மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். மற்ற அலுவலர்களைப் போன்று அலட்சியம் காட்டாமல், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் உடனடியாக நடவடிக்கை எடுத்ததால் அந்தப் பெண் காவலர் உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கோயில்களில் இலவச திருமணம்: மாற்றுத்திறனாளிகளுக்கு முதலமைச்சரின் அன்பு பரிசு

ABOUT THE AUTHOR

...view details