செங்கல்பட்டு: தமிழ்நாட்டில் 13 காவல்துறை அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு நேற்று (மார்ச் 22) உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை நுண்ணறிவு பிரிவு துணை ஆணையராக பணியாற்றி வந்த விமலா தற்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். குட்கா வழக்கில் சிபிஐ விசாரணை வளையத்திற்குள் சிக்கிய எஸ்பி விமலா, தற்போது சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு புலனாய்வு பிரிவு எஸ்பியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும், செங்கல்பட்டு மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளராக இருந்து வந்த அரவிந்தன் ஐபிஎஸ், மத்திய அரசுப் பணிக்குச் செல்ல உள்ளதால், மயிலாடுதுறை மாவட்ட எஸ்பி சுகுணா சிங், செங்கல்பட்டு மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில், கடந்த ஒரு வருடத்தில் 3 எஸ்பி-கள் மாறி உள்ளனர்.
இங்கு எஸ்பி, ஆக இருந்த கண்ணன் என்பவர், சிறப்பு டிஜிபி,யாக இருந்த ராஜேஷ் தாஸ், பெண் ஐபிஎஸ், அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில், ராஜேஷ் தாசுக்கு ஆதரவாகச் செயல்பட்ட குற்றச்சாட்டுக்கு உள்ளாகி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கண்ணனைத் தொடர்ந்து, விஜயகுமார் எஸ்பி-யாக நியமிக்கப்பட்டார். சொந்தக் காரணங்களுக்காக, அவர் சென்னை பொருளாதார குற்றப் பிரிவுக்கு மாற்றல் வாங்கிக்கொண்டு சென்றதால், அரவிந்தன் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டார்.