செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தனியார் செல்போன் கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த நகரின் முக்கிய சந்திப்புக்கு அருகே இந்த கடை உள்ளது. அதிலும், காவல் நிலையத்தில் இருந்து 100 மீட்டருக்குள் இந்த கடை இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், கடந்த இரு நாட்களுக்கு முன்னதாக நள்ளிரவில் இந்த கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த சில மர்ம நபர்கள், 13 லட்சம் ரூபாய் மதிப்புள்ள செல்போன்கள் மற்றும் உதிரி பாகங்களை திருடிச் சென்றுள்ளனர்.
மேலும், காவல் நிலையத்துக்கு அருகிலேயே இயங்கி வந்த கடையில் திருடு போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கடைக்கு அருகில் உள்ள நான்கு முனைச் சந்திப்பில் சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. செல்போன்கள் திருடு போனது குறித்து மதுராந்தகம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் பிரணீத், சைபர் கிரைம் மற்றும் மதுராந்தகம் காவல் நிலைய போலீசார் ஆகியோரை உள்ளடக்கிய தனிப்படை அமைத்து உடனடியாக கொள்ளையர்களை கண்டுபிடிக்க உத்தரவிட்டுள்ளார்.
மேலும், மதுராந்தகம் உட்கோட்ட துணைக் கண்காணிப்பாளர் சிவசக்தி மேற்பார்வையில், மதுராந்தகம் காவல் நிலைய ஆய்வாளர் தர்மலிங்கம் தலைமையில், தனிப்பிரிவுக் காவலர் கவியரசன், மாவட்ட சைபர் செல் பிரிவு உதவி ஆய்வாளர் தனசேகரன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.