தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடிப்பழக்கத்துக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.. முன்னாள் மதுப்பிரியரின் நச் போஸ்டர் மெசேஜ்.. - quit alcohol poster

செங்கல்பட்டு மாவட்டத்தில் குடிப்பழக்கத்தை கைவிட்டு ஓராண்டு நிறைவு பெற்றதையடுத்து, ஊரெல்லாம் போஸ்டர் அடித்து கொண்டாடிய முன்னாள் மதுப் பிரியரின் செயல் கலகலப்பையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.

குடிப்பழக்கத்துக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
குடிப்பழக்கத்துக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

By

Published : Feb 26, 2023, 4:08 PM IST

Updated : Feb 26, 2023, 4:47 PM IST

முன்னாள் மதுப் பிரியர் மனோகரன்

செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூரில் உள்ள பக்தவத்சலம் நகரில் வசிப்பவர் மனோகரன். இவருக்கு 53 வயதாகிறது. இளமை பருவத்தில் தொடங்கி 32 வருடங்களாக குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்தார். இதனால் பல்வேறு இன்னல்களை சந்தித்துவந்தார். இப்படிப்பட்ட குடிப்பழக்கத்தை விட விடவேண்டும் என உறுதியுடன் முடிவெடுத்து, கடந்த ஒரு வருடமாக மதுவைத் தொடுவதில்லை.

2022ஆம் ஆண்டு பிப்ரவரி 26ஆம் தேதி, மதுவை விட்டொழித்த இவர், ஒரு வருடம் நிறைவடைந்ததை நினைவில் வைத்துக் கொண்டு, போஸ்டர் அடித்து ஊரெல்லாம் ஒட்டி கொண்டாடி வருகிறார். அந்த போஸ்டர் அடிக்க ஒரு உபயதாரரை வேறு தேடிக் கண்டுபிடித்துள்ளார் மனோகரன். இதுகுறித்து ஈடிவி பாரத் தமிழ் ஊடகத்துக்கு தொலைபேசி மூலம் பேட்டியளித்த மனோகரன், குடிப்பழக்கத்தால் தனது மரியாதையை, ஊரில் மட்டுமின்றி சொந்த வீட்டிலும் இழந்திருந்ததாகக் கூறுகிறார்.

முன்னாள் மதுப் பிரியர் மனோகரன்

ஒரு நாளைக்கு குறைந்தது 300 முதல் 400 ரூபாய் வரை குடிக்கு செலவிட்டதால், வீட்டு மனை ஒன்றையே விற்க நேரிட்டதாகவும் நொந்து கொள்கிறார் மனோகரன். தற்போது அந்தப் பழக்கத்தை விட்டுவிட்டதால், வீட்டிலும் ஊரிலும் மரியாதை கூடியுள்ளது எனவும் உடல் நலமும் சீராக உள்ளதாகவும் தெரிவித்தார்.

குடியின் சீரழிவுகளை மற்றவருக்கு உணர்த்தவே, சிலர் கிண்டல் செய்தாலும் பரவாயில்லை என்று போஸ்டர் அடித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதாகக் கூறினார்‌. 'குடிப்பவர்கள் திருந்தினால் மதுக்கடைகளை அரசாங்கம் தானாக மூடும்' என்ற இந்த முன்னாள் மதுப் பிரியரின் வார்த்தைகள், பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது என்றால் அது மிகையில்லை.

இதையும் படிங்க:சிக்கன் Vs மட்டன்: எது ஆரோக்கியத்திற்கு கேடு?

Last Updated : Feb 26, 2023, 4:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details