செங்கல்பட்டு:இந்தியாவில் இன்று இரண்டாம்கட்ட கரோனா தடுப்பூசி மருந்து ஒத்திகை நடத்தப்பட்டது. சென்னையில் நடந்த தடுப்பூசி ஒத்திகையை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நேரில் ஆய்வுசெய்தார். இன்று காலையில் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் தடுப்பூசி ஒத்திகையை நேரில் பார்வையிட்டார்.
பின்னர், ஓமந்தூரார் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளை நேரில் சென்று பார்வையிட்டார். அடுத்தபடியாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி ஒத்திகையைப் பார்வையிட்டார். பின்னர், தடுப்பு மருந்து தயாரிக்க உகந்த நிறுவனமான ஹெச்.எல்.எல். பயோடெக் தயாரிப்பு நிறுவனத்தை நேரில் சென்று ஆய்வுசெய்தார்.
பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஹர்ஷ் வர்தன், "கரோனா நோயினால் பல நாடுகள் தவித்துக்கொண்டிருக்கும் நிலையில், இந்தியா துரிதமாகச் செயல்பட்டு மக்களைப் பாதுகாத்துவருகிறது. அதிலும், தமிழ்நாடு சிறப்புடன் செயல்படுகிறது" என்றார்.
தொடர்ந்து, இந்த பயோடெக் நிறுவனம் மூலம் கரோனா நோய்க்கான தடுப்பு மருந்து தயாரிப்பதற்கு மத்திய அரசிடம் பரிந்துரை செய்வதாகத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், "கரோனா நோயின் பிடியிலிருந்து அரசு ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள் துரிதமாகச் செயல்பட்டு மக்களைப் பாதுகாத்து மீட்டுவருகின்றனர். பல நாடுகளில் தற்போதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தமிழ்நாட்டில் கரோனா தொற்று பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் குறைவாகவே உள்ளது. விரைவில் நோய்க்கான மருந்து தயாரித்து விநியோகம்செய்யப்படும்" எனக் கூறினார்.
HLL பயோடெக் நிறுவனத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு இந்நிகழ்வில், தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,மாநிலங்களவை உறுப்பினர் டி.கே. ரங்கராஜன், தமிழ்நாடு சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் ரூ.85 கோடி மதிப்பீட்டில் புதிய பாலங்கள்: முதலமைச்சர் திறந்துவைப்பு!