செங்கல்பட்டு: உலக முதலீட்டாளர்கள் மாநாடு வரும் ஜனவரி 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் சென்னையில் நடைபெறவுள்ளதை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்ட தொழில் முதலீடுகள் மாநாடு நடைபெற்றது. இதில் ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ அன்பரசன் முன்னிலையில் ரூபாய் 2 ஆயிரத்து 590 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
உலக முதலீட்டாளர்கள் மாநாடு:இந்நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ அன்பரசன் பேசியதாவது, “வேளாண்மைக்கு அடுத்தபடியாக மக்களுக்கு அதிக வேலைவாய்ப்பை வழங்குவது MSME துறை (Ministry of Micro, Small and Medium Enterprises) ஆகும். உயர் கல்வியில் முதலிடத்தில் இருக்கும் தமிழகத்தில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கி தந்திடவும், 2030ல் தமிழ்நாட்டில் ஒரு டிரில்லியன் பொருளாதாரம் என்ற இலக்கினை அடையவும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் வரும் ஜனவரி மாதம் 7, 8 ஆகிய நாட்களில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டிற்கு 3 ஆம் இடம்:முதலமைச்சர், தொழில் துறையில் வெளிநாடுகளிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும், 241 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 2 லட்சத்து 97 ஆயிரத்து 196 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்து, 4 லட்சத்து 15 ஆயிரத்து 252 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்க வழிவகை செய்துள்ளார். முதலமைச்சரின் அயராத உழைப்பினாலும், சீரிய திட்டங்களாலும், இந்திய அளவில், தொழில் துறையில் 14 ஆம் இடத்திலிருந்த தமிழ்நாடு இன்று 3 ஆம் இடத்திற்கு முன்னேறி உள்ளது.
முதலீடுகளை ஈர்க்க இலக்கு:தொழில் துறையில் தமிழ்நாட்டை முதலிடத்திற்கு கொண்டு வர நடத்தப்பட உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தொழில் துறைக்கும், MSME துறைக்கும் தொழில் முதலீடுகளை ஈர்க்க, இலக்கு நிர்ணயித்து முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்கள். தொழில் முதலீடுகளை ஈர்க்கும் விதமாக, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும், தொழில் முதலீடு மாநாடுகள் நடத்தப்படுகிறது. செங்கல்பட்டு மாவட்டத்திற்கு MSME தொழில் நிறுவனங்கள் வாயிலாக, ரூபாய் 2,500 கோடி முதலீடுகளை ஈர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்:நிர்ணயிக்கப்பட்ட இலக்கிற்கும் அதிகமாக 163 MSME தொழில் நிறுவனங்கள் மூலம் ரூபாய் 2 ஆயிரத்து 590 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு உள்ளது. இதன் மூலம் மாவட்டத்திலேயே, வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பு, விண்வெளி மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிப்பு, உணவு பதப்படுத்தும் தொழில்கள், தோல் பொருட்கள் ஆயத்த ஆடைகள் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் தொடங்கப்பட உள்ளன.
இதன் மூலம் 9 ஆயிரம் நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்புகள் உருவாகும். தொழில் முனைவோர்கள் தொழில் தொடங்குவதற்கான உரிமங்களை விரைந்து பெறுவதற்கு Single widow 2.O மூலம் அரசு துறைகள் வழங்கும் 163 வகையான சேவைகளை இணைய வழியிலேயே பெற்றுக்கொள்ளலாம். இந்த சேவையின் மூலம் இதுவரை 26 ஆயிரத்து 480 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 24 ஆயிரத்து 117 பேருக்கு உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளது.
தொழில்மனைகள் ஒதுக்கீடு:இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ள நிறுவனங்களுக்கும், இத்திட்டத்தின் மூலம் அனுமதிகள் விரைந்து வழங்கப்படும் என தெரிவித்துக் கொள்கிறேன். தொழில் முனைவோர் தொழில் தொடங்க ஏதுவாக, ஆலத்தூரில் 67.96 ஏக்கரிலும், கொடூரில் 99.13 ஏக்கரிலும் சிட்கோ தொழிற்பேட்டைகள் தொடங்கி வைக்கப்பட்டு தொழில் மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.
புதிய தொழில் முனைவோர்களாக உருவாக்கம்: முதலமைச்சர் MSME தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக 5 வகையான சுயதொழில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இதுவரை 1,099 கோடியே 86 லட்சம் ரூபாய் மானியத்துடன் 3 ஆயிரத்து 890 கோடியே 59 லட்சம் ரூபாய் வங்கி கடனுதவி வழங்கப்பட்டு, 30 ஆயிரத்து 981 படித்த இளைஞர்கள் புதிய தொழில் முனைவோர்களாக உருவாக்கப்பட்டுள்ளனர்.
126 கோடியே 84 லட்ச ரூபாய் மானியத்துடன் ரூபாய் 256 கோடியே 7 லட்சம் வங்கி கடனுதவி வழங்கப்பட்டு, ஆயிரத்து 65 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் புதிய தொழில் முனைவோர்களாக உருவாக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும் 18 கோடியே 27 லட்சம் ரூபாய் மானியத்துடன் 77 கோடியே 78 லட்சம் ரூபாய் வங்கி கடனுதவி வழங்கப்பட்டு, 534 படித்த இளைஞர்கள் புதிய தொழில் முனைவோர்களாக உருவாக்கப்பட்டுள்ளனர். இதில் 263 பேர் பெண்கள், 127 பேர் பட்டியல் இனத்தவர் மற்றும், பழங்குடியினர் 22 பேர் சிறுபான்மையினர், 7 மாற்றுத்திறனாளிகள் தொழில் முனைவோராக உருவாக்கப்பட்டுள்ளனர்.
கடன் உத்தரவாத திட்டம்: தமிழகத்தின் MSME நிறுவனங்களின் வளர்ச்சிக்காக, முதலமைச்சர் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில், இந்தியாவிலேயே முதன் முறையாக சொத்து பிணையில்லா கடன் பெற, ‘தமிழ்நாடு கடன் உத்தரவாத திட்டம்’ செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் இதுவரை, 25 ஆயிரத்து 348 தொழில் முனைவோர்களுக்கு ரூபாய் 3 ஆயிரத்து 477 கோடி 72 லட்சம் வங்கி கடன் உதவிக்கு, ரூபாய் 410 கோடியே 78 லட்சம் கடன் உத்தரவாதத்தை அரசு அளித்துள்ளது.
MSME நிறுவனங்கள் தங்கள் விலை பட்டியல்களை வங்கிகளில் வைத்து விரைவாக கடன் பெற, தமிழ்நாடு வர்த்தக வரவுகள் மற்றும் தள்ளுபடி தளம் (Tamil Nadu TReDS) ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், MSME நிறுவனங்களின் 6,900 விலைப்பட்டியல்களுக்கு, ரூபாய் ஆயிரத்து 289 கோடியே 22 லட்சம் வங்கி கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.