செங்கல்பட்டு:மதுராந்தகம் அருகே அமைந்துள்ளது, வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம். இந்த சரணாலயம் அமைந்துள்ள ஏரிக்கு வலையபுத்தூரில் உள்ள ஏரியில் இருந்து தண்ணீர் கொண்டு செல்வதற்காக வரத்துக் கால்வாயை தூர்வாரி அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியை மாவட்ட ஆட்சித் தலைவர் ராகுல்நாத் நேற்று (ஜூன் 17) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு பார்வையாளர்கள் வருகை எண்ணிக்கை குறைவாகக் காணப்படுவதால் சரணாலயத்தை கூடுதல் அம்சங்களுடன் பொலிவுபடுத்தும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என ராகுல்நாத் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த சரணாலயத்தில் சுற்றுலாப் பயணிகளின் வரத்தை அதிகரிக்கும் நோக்கில், மக்களுக்கு குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, இருக்கை வசதி போன்றவற்றை ஏற்பாடு செய்து தர நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும் என்றும், பறவைகள் சரணாலயத்திற்கு வரும் பொதுமக்களுக்கு பஞ்சாயத்து மூலம் ஆங்காங்கே தண்ணீர் வசதி ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்றும் கூறினார்.
மேலும் பேசிய அவர், “வேடந்தாங்கலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு பேருந்து நிறுத்தம், நிழற்குடை போன்றவை முறையாக அமைக்கப்பட வேண்டும். வனத்துறை சார்பாக பறவைகள் சரணாலயம் பற்றி ஆர்வலர்கள், சுற்றுலாவாசிகள் தெரிந்து கொள்வதற்காக நெடுஞ்சாலை ஓரங்களில் பறவைகளின் பெயர்கள், படங்களுடன் கூடிய தகவல் பலகை வைக்க வேண்டும்.
மகளிர் திட்டத்தின் மூலம் தயாரிக்கப்படும் டி ஷர்ட், தொப்பி போன்ற பொருட்களைக் கடைகளில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதனைத் தொடர்ந்து, பறவைகள் சரணாலயத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதற்கு ஊராட்சிகளின் மூலம் தூய்மைப்படுத்தும் பணிகளை செய்ய வேண்டும்.
நெடுஞ்சாலைத் துறை மூலம் பறவைகள் சரணாலயத்துக்குள் இருக்கும் காலியான இடங்களில் மரங்களை நட ஏற்பாடு செய்ய வேண்டும். வேடந்தாங்கல் ஏரியில் உள்ள இரண்டு மதகுகளில் ஷட்டர் போட வேண்டும். அதன் பிறகுதான் வயலூர் ஏரியிலிருந்து வேடந்தாங்கல் ஏரிக்கு தண்ணீர் வசதி கொண்டு வர முடியும்.