செங்கல்பட்டு: புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழுவினர் இன்று பார்வையிட்டனர்.
நிவர் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும், பயிர்களையும் மத்திய அரசின் சிறப்புக் குழுவினர் பார்வையிட்டு வருகின்றனர். இன்று (டிச. 6), திருப்போரூர் ஒன்றியத்தில், ஒரு பகுதி, திருக்கழுக்குன்றத்தில் இரும்புலிச்சேரி, பூந்தண்டலம் என இரு பகுதிகள், சித்தாமூர் ஒன்றியத்தில் வெடால் என நான்கு இடங்களில் மத்திய குழுவினர் பார்வையிட்டனர்.
இதில் கடைசியாக மாலை வெடால் பகுதிக்கு மத்திய குழுவினர் வருகை தந்து பாதிக்கப்பட்ட பயிர்களை பார்வையிட்டனர். அந்தப் பகுதியில் மட்டும் ஏராளமான ஏக்கர் பயிர்கள் பாழாகியுள்ளதாக, அப்பகுதி விவசாயிகள் மத்திய குழுவினரிடம் தெரிவித்தனர்.
மத்திய குழுவிடம் முறையிட்ட விவசாயிகள் பயிர்க் காப்பீடு போன்ற அடிப்படை விபரங்கள் கூட அப்பகுதி மக்களுக்கு, குறிப்பிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் முழுமையாக எடுத்துக் கூறவில்லை என முறையிட்டனர்.
வெள்ள சேதங்களைப் பார்வையிட்ட மத்திய குழுவினர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறி விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினர்.