செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம், தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக இன்று (பிப். 12) புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டது.
இந்தப் புகாரை விஜய் மக்கள் இயக்கத்தின் செங்கல்பட்டு மாவட்டத் தலைவரான சூரிய நாராயணன் அளித்துள்ளார். புகாரில் இயக்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவரான ஜெயசீலன், இயக்கத்தை குறித்தும் அகில இந்திய பொதுச் செயலாளரான புஸ்ஸி ஆனந்த் குறித்தும் தவறான தகவல்களை பரப்புவதால் கொந்தளிப்பு ஏற்படும் சூழ்நிலை உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஜெயசீலன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
புஸ்ஸி ஆனந்த் சாதி பாகுபாடு பார்த்து விஜய் மக்கள் இயக்கத்தில் பொறுப்பாளர்களை நியமிப்பதாகவும், 'மாஸ்டர்' திரைப்படத்தின் டிக்கெட் விலை 100 ரூபாயாக இருந்தபோதிலும் அதனை ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்து, முறைகேடு செய்ததாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தளபதி விஜய் மக்கள் இயக்க முன்னாள் பொறுப்பாளர் மீது புகார் ஜெயசீலன் 2011ஆம் ஆண்டு, இயக்கத்தின் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதாகவும் தற்போது அவர் இயக்கத்தை குறித்து தவறான தகவல்களை பரப்பி வருவதாகவும் புகார் அளித்துள்ளனர்.
வெற்று விளம்பரத்திற்காக விஜய் மக்கள் இயக்கத்தினர் இந்தப் புகாரினை கொடுத்துள்ளதாக பொதுமக்களிடையே சந்தேகம் எழுந்துள்ளது. சட்டப்பேரவை தேர்தல் நெருங்க உள்ள சமயத்தில், விஜய்க்கு விளம்பரம் தேடும் விதமாகவும், மாஸ்டர் படத்திற்கு விளம்பரம் தேடும் விதமாகவும், இந்தப் புகார் அளிக்கப்பட்டுள்ளதா என்று அனைத்து தரப்பினரும் கேட்கின்றனர்.