தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களாக பல அரசியல் கட்சியினரும் தந்திரமாக காய் நகர்த்தி வருகின்றனர்.
உள்ளூர் வேட்பாளர்கள் இல்லையா?
செங்கல்பட்டு மாவட்டத்தில், செய்யூர், மதுராந்தகம் என்ற இருதொகுதிகளும் உள்ள நிலையில், மதுராந்தகம் திமுக சட்டப்பேரவை உறுப்பினராக, கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தைச் சேர்ந்த புகழேந்தி உள்ளார். செய்யூர் சட்டப்பேரவை உறுப்பினராக, திமுக-வின் ஆர்.டி.அரசு இருக்கிறார். இரண்டு திராவிடக் கட்சிகளும் உள்ளூர் வேட்பாளர்களை நிறுத்துவதில்லை என அக்கட்சிகளின் தொண்டர்கள் குமுறுகின்றனர்.
கடந்த தேர்தல் நிலவரம்:
கடந்த முறை அதிமுக சார்பாக மதுராந்தகம் தொகுதிக்கு கூட்டணி கட்சியைச் சேர்ந்த செ.கு. தமிழரசன் நிறுத்தப்பட்டார். இவருக்கும் இந்தத் தொகுதிக்கும் என்ன சம்பந்தம் எனத் தெரியவில்லையென்றாலும், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் முடிவை மாற்ற அதிமுகவினர் துணியவில்லை. உள்ளூர் வேட்பாளர் இல்லாததாலேயே அதிமுக அத்தொகுதியில் கோட்டைவிட்டது.
செய்யூரிலும் அதே போலவே தொகுதிக்கு சற்றும் அறிமுகமில்லாத முட்டுக்காடு முனுசாமியை அதிமுக களமிறக்கியது.அங்கும் தோல்வியே.
திமுக மதுராந்தகம் தொகுதியில் புகழேந்தியை வேட்பாளராக அறிவித்தது விமர்சனங்களைக் கிளப்பியது. உள்ளூரில் தகுந்த வேட்பாளர்கள் இல்லாததால் புகழேந்தி நிறுத்தப்பட்டாரா என தொண்டர்கள் பரிதவித்தாலும், கட்சியின் மறைமுக செயல்பாடுகளைக் குறித்து கேள்வி எழுப்பவில்லை. தனித்தொகுதியில் கூட உள்ளூர் ஆள்களை நிறுத்தவிடாமல் செய்வதாக அப்பகுதியினர் குற்றஞ்சாட்டினர்.
செய்யூர் திமுக சட்டப்பேரவை உறுப்பினரான ஆர்.டி.அரசுவுக்கு சொந்த ஊர் இரும்பேடு. மிகச்சொற்ப தபால் ஓட்டுகள் வித்தியாசத்தில் இவர் ஜெயித்தார்.
தொண்டர்களின் எதிர்பார்ப்பு:
அடுத்த ஊர் வேட்பாளர்களுக்கு தங்கள் ஊர்களின் பிரச்னை நேரடியாக எப்படி தெரியும். இருகட்சிகளுமே தகுதிவாய்ந்த உள்ளூர் வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது அவ்விரு கட்சித் தொண்டர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதையும் படிங்க:திமுக நடத்தும் மக்கள் கிராம சபை கூட்டங்களுக்கு தடை விதிக்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனு!