செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்குள்பட்ட 12 அரசு மதுபானக் கடைகள் நேற்று காலை 10 மணி அளவில் திறக்கப்பட்டன. இதில் பெரும்பாலான மதுபானக் கடைகளை திறக்கக் கூடாது என திமுக சார்பிலும், குறிப்பாக பெண்கள் அரசு மதுபானக் கடை திறக்கக் கூடாது என கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
இப்போராட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து, பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகே, அரசு மதுபானக்கடை திறக்கப்பட்டு நுழைவு சீட்டும் வழங்கப்பட்டது. மேலும் நுழைவு சீட்டு பெற்றவருக்கு தகுந்த இடைவெளி விட்டு நிற்கும்படி அறிவுறுத்தல் செய்யப்பட்டிருந்தது. இருப்பினும் ஒன்றரை மாதம் கழித்து மதுபானக் கடைக்கு மதுப்பிரியர்கள் வந்திருப்பதால், தகுந்த இடைவெளியை பின்பற்றாமல் வரிசையில் மட்டுமே நின்றதால், காவல் துறையினர் கட்டுப்படுத்த முடியாமல் திணறினர்.