செங்கல்பட்டு: இந்தியாவின் 75ஆவது சுதந்திர தின விழா, இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதனையடுத்து அச்சரப்பாக்கம் பஜார் பகுதியில் ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி, பாஜகவினர் இன்று (ஆக.15) காலை தேசிய கொடியேற்றி இனிப்பு வழங்க முயன்றனர்.
அப்போது சம்பவ இடத்துக்கு வந்த அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் இளவரசு, குறிப்பிட்ட இந்த இடத்தில் தேசியக் கொடியை ஏற்றி சுதந்திர தினவிழா கொண்டாடக் கூடாது எனக்கூறியுள்ளார். மேலும் இதனால் சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாஜகவினரைக் கைது செய்வது தொடர்பான காணொலி சமுதாயக்கூடத்தில் அடைக்கப்பட்ட பாஜகவினர்
இதனிடையே தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு வந்த வருவாய்த்துறையினர், தேசியக்கொடி ஏற்றுவதற்காக வைக்கப்பட்டிருந்த கம்பத்தை பிடுங்கிச் சென்றனர். இந்நிலையில் வேறு ஒரு கம்பத்தை மீண்டும் அதே இடத்தில் வைத்து, பாஜக உள்ளிட்ட அமைப்பினர் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினர்.
இதனால் கோபமடைந்த காவல் ஆய்வாளர், பாஜக உள்ளிட்ட அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் சிலரைக் கைது செய்து சமுதாயக் கூடத்தில் அடைத்து வைத்தார்.
இதுகுறித்து தகவலறிந்த செங்கல்பட்டு மாவட்ட காவல் உதவிக் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா, சமுதாயக் கூடத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த கட்சிப் பிரமுகர்களை விடுவிக்க காவல் ஆய்வாளருக்கு உத்தரவிட்டார்.
பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட காவல்துறை
பின்னர் காவல் உதவிக்கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா, மேல்மருவத்தூர் காவல் ஆய்வாளர் அமல்ராஜ் ஆகியோர் ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி, பாஜக நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர்.
இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் பேசுகையில், 'சம்பவம் குறித்து எனக்கு தகவல் வந்துள்ளது. விசாரணையின் முடிவில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்'என்றார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:75ஆவது சுதந்திர தினம்- மதுரை மக்களுடன் ஓர் சந்திப்பு!