செங்கல்பட்டு: உலகப் பொருளாதார மயமாக்கல் என்பது இரு பக்கமும் கூர்முனை உள்ள கத்தி என்று பல தருணங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ 10, 20 வருடங்களுக்கு முன்னதாக நாம் கடன் வாங்க வேண்டி இருந்தால் நம்மைப் பற்றி முற்றிலும் அறிந்த அக்கம் பக்கத்தினரிடம் 'கைமாற்று' என்ற பெயரில் வட்டி இல்லாக் கடன் வாங்குவோம்.
நம்மைப் பற்றியும் நம் முன்னோர்கள் பரம்பரை பற்றியும் அறிந்தவர்கள், எந்த வித பிணையமும் இல்லாமல், வட்டி போன்ற எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல், நம்பிக்கையின் பெயரில் மட்டுமே சிறு தொகையைக் கடனாக அளித்து உதவி செய்து வந்தனர். அதன் பின்னர், முக அறிமுகம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில், சிறு தொகையை வட்டியாகக் கேட்டு நம்பிக்கையின் அடிப்படையில் கடன் கொடுத்து வாங்கி வந்தனர்.
உலகப் பொருளாதாரச் சூழல் மற்றும் பொருளாதாரம் சார்ந்த நடவடிக்கைகள் மாறிய பிறகு, நண்பர்கள், உறவினர்கள் நமக்குத் தெரிந்த சிறு, குறு கடைக்காரர்கள் என்பவர்கள் கடன் கொடுப்பது என்பது முற்றிலும் ஒழிந்தது. இதற்கு அடுத்தப்படியாக, சாமானியர்களின் புகலிடமாக வங்கிகள் இருந்தன. வங்கிகளும் குறிப்பிட்ட அளவு வட்டிக்குக் குறிப்பிட்ட அளவுத் தொகையைக் கடனாக அளித்து வந்தன. இதற்கான நீண்ட நடைமுறைகள், தேவையற்ற அலைக்கழிப்புகள் போன்றவை, சாமானிய மக்களை வங்கிகள் பக்கம் கடன் வாங்கச் செல்ல விடாமல் தடுத்தன என்பது நிதர்சனமான உண்மை.
இதையும் படிங்க:'சதுரங்க வேட்டை' பட பாணியை மிஞ்சிய பண மோசடி.. நூதன திருட்டில் ஈடுபட்டவர் சிக்கியது எப்படி?
இதனிடையே, இணையதளப் பரிமாற்றம், இணையதள சேவைகள், குறிப்பாக ஆண்ட்ராய்டு மொபைல் போன்கள், அதில் பயன்படுத்தப்படும் செயலிகள் என வந்த பிறகு, கடன் வாங்குவது, கடன் கொடுப்பது என்பதே புது பரிமாணம் எடுத்தது. உங்கள் ஆண்ட்ராய்டு போன்களை கண்காணிக்க மற்றும் கட்டுப்படுத்த எங்களுக்கு அனுமதி அளியுங்கள் என்று ஒரே ஒரு செய்தியை மட்டும் நமக்கு அனுப்பிவிட்டு, நமக்குத் தெரிந்தும், தெரியாமலும், அறிந்தோ, அறியாமலோ அனுமதி அளிக்கிறோம் சில செயலிகள் நம்மிடம் அனுமதியும் பெறாமல் நம் ஆண்ட்ராய்டு போன்களில் உள்ள தொலைப்பேசி தொடர்புகள், புகைப்படங்கள், நம்முடைய சொந்த விஷயங்கள், போன்றவற்றைச் சேகரித்து வைத்துக் கொள்கின்றன.
அதன் பின்னர், நம்முடைய தரவுகளை எடுத்துக் கொள்ளும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களோ அல்லது சம்பந்தமே இல்லாத வேறு சில நிறுவனங்களோ, நம்மைத் தொடர்பு கொண்டு உங்களுக்கு இலட்சக்கணக்கில் கடன் கொடுக்க நாங்கள் ரெடி என்று வலை விரிக்கின்றனர். நாம் பிரமித்துப் போய் நிற்கும் போது, நீங்கள் என்ன தொழில் செய்கிறீர்கள் என்று சம்பிரதாயத்துக்குக் கேட்கின்றனர். ஆனால், நாம் செய்யும் தொழில் சட்டத்துக்கு உட்பட்டதா, சட்டத்துக்குப் புறம்பானதா என்பது பற்றிய சிறு அறிவு கூட அந்த செயலிகளை இயக்குபவர்களுக்கு கிடையாது.