சென்னை:கடந்த 22ஆம் தேதி சென்னை அடுத்த ஊரப்பாக்கம் பகுதியில் காரில் சென்று கொண்டு இருந்த முன்னாள் எம்.பி மஸ்தான், திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்பட்டது. தனது தந்தையின் மரணத்தில் மர்மம் நிலவுவதாக மஸ்தானின் மகன் ஹரிஸ் ஷாநிவாஸ் அளித்த புகாரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
முன்னாள் எம்.பி. மஸ்தானின் உடல் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், அவர் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கொலை வழக்காக பதிவு செய்த போலீசார் மஸ்தானின் செல்போன் சிக்னல், அவர் பேசிய அழைப்புகள் குறித்து பொலீசார் துப்பு துலக்கினர்.
மேலும் சம்பவத்தன்று மஸ்தானுடன் காரில் சென்ற அவரது தம்பியின் மருமகன் இம்ரான் பாஷாவிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் நண்பர்கள் உதவியுடன் மஸ்தானை கொன்றதாக இம்ரான் பாஷா ஒப்புக் கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் வழக்கு தொடர்பாக இம்ரான் பாஷா அவரது கூட்டாளிகள் தமீம், நசீர், தலகீத் அஹ்மது, லோகேஷ்வரன் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், 15 லட்ச ரூபாய் கடன் பெற்றது மற்றும் சொத்து பிரச்சினைகள் காரணமாக அவரது தம்பி ஆதம் பாஷாவிடம் மஸ்தான் கோபமாக பேசியதாகவும், அதற்காக மஸ்தானை கொன்றதகாவும் இம்ரான் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும் மஸ்தான் கொலையில் அவரது தம்பி ஆதம் பாஷாவுக்கு தொடர்பு இருப்பதாக கூறிய போலீசார், வழக்கு தொடர்பாக அவரை கைது செய்து வாக்குமூலம் பெற்றனர். தொடர்ந்து ஆதம் பாஷா உள்ளிட்டோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.