செங்கல்பட்டு: மாவட்டத்திலுள்ள சிறுவர் கூர்நோக்கு இல்லத்திற்கு, உளவியலாளர் பணிக்கு, தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசின் சமூக பாதுகாப்புத் துறையின் கீழ், செங்கல்பட்டு மாவட்டத்தில், சிறார் கூர்நோக்கு இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள சிறுவர்களுக்கு, உளவியல் ரீதியிலான ஆலோசனைகள் வழங்க, மதிப்பூதிய அடிப்படையில் பணிபுரிய, தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் மதிப்பூதியம் என்ற வகையில், மாதமொன்றுக்கு 5 ஆயிரம் மட்டும், இதற்கான ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாதத்தில் ஐந்து நாட்கள் மட்டும், குறிப்பிட்ட சிறார்களுக்கு, உளவியல் ரீதியிலான ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள் வழங்குவது இப்பணியின் அம்சம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், உளவியலில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தகுதியுடைய விண்ணப்பதாரர்கள், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். www.kancheepuram.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பப் படிவங்களைப் பெற்று, தகுந்த சான்றிதழ்களின் நகல்களுடன் விண்ணப்பிக்கலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபால் மூலமோ பிப்ரவரி 15ஆம் தேதி, மாலைக்குள், “கண்காணிப்பாளர், அரசினர் சிறப்பு இல்லம் (பழைய தாலுக்கா அலுவலகம் எதிரில்), செங்கல்பட்டு - 603 002” என்ற முகவரிக்கு அனுப்பிவைத்து, விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஜான் லூவிஸ் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில், குழந்தைகளுக்கு உளவியல் ரீதியிலான ஆலோசனைகள் வழங்கும் கதாபாத்திரத்தில் விஜய் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.