சென்னை: சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக சனாதன ஒழிப்பு மாநாடு என்ற பெயரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்திய நிகழ்வில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், "கொசு, டெங்கு, ஃப்ளூ, மலேரியா போன்ற நோய் சனாதனம். அதை அழிக்க வேண்டும்" என கூறி இருந்தார். இதற்கு பல்வேறு எதிர் தரப்பினர் தங்களது கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், இது குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை 'X’ வலைதளப் பதிவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு என்னுடைய மறுப்பு என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் பேசிய அண்ணாமலை, "ஸ்டாலினுக்கு வணக்கம். உங்கள் அறிக்கையையும், உங்கள் மகனின் அறிக்கையையும் பார்த்தோம். கடந்த 4 நாட்களாக நீங்கள் தோற்கும் சண்டையை போடுகிறீர்கள். இன்று பிரதமர் நரேந்திர மோடி குறித்து பொய்களை பரப்புகிறீர்கள்.
தமிழ்நாட்டில் இருந்து ஏதாவது ஒன்றை ஒழிக்க வேண்டும் என்றால், அது திமுகதான். D - Dengue, M - Malaria, K - Kosu. இனி வரும் காலங்கள் மக்கள் இந்த கொடிய நோய்களுடன் திமுகவை தொடர்புபடுத்துவார்கள் என்று நம்புவோம்" என்று பேசி இருக்கிறார். இதற்கு முன்னதாக அண்ணாமலை, "சனாதன தர்மத்திற்கு உதாரணம், 'அய்யா வைகுண்டர்' . 'முதலும் முடிவும் இல்லாத தர்மம்தான் சனாதன தர்மம்'. சனாதன தர்மத்தில் மட்டும்தான் ஒரு மனிதன் கடவுளாக முடியும் என்று சொல்கிறோம்." என்று குறிப்பிட்டு இருந்தார்.