செங்கல்பட்டு:பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அடுத்தக் கட்டமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய உள்ளதாக அமர் பிரசாத் ரெட்டி தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை பனையூரில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் வீடு உள்ளது. அவரது வீட்டின் அருகே, சுமார் 50 அடி உயரம் கொண்ட பாஜக கொடிக் கம்பம் நடுவதற்கு அண்ணாமலை மற்றும் பாஜகவினர் நடவடிக்கை மேற்கொண்டனர். அதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் 20ஆம் தேதி பாஜகவினருக்கும், அப்பகுதி மக்களுக்கும் இடையே கொடிக் கம்பம் நடுவது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டது. அதனையடுத்து அந்த இடத்தில் கொடிக்கம்பம் நடக்கூடாது என போலீசார் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:தலித்துகள் மீதான அடக்குமுறையை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; தலித் அறிவுசார் கூட்டமைப்பு வலியுறுத்தல்..
இதனிடையே பாஜகவினருக்கும் காவல் துறையினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தமிழக பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் மற்றும் விளையாட்டுப் பிரிவின் தலைவராக இருக்கும் அமர் பிரசாத் ரெட்டி, போலீசார் பாஜக கொடியை அகற்றும்போது பொக்லைன் இயந்திரத்தைச் சேதப்படுத்தியதாக கைது செய்யப்பட்டார். அமர் பிரசாத் ரெட்டி உள்பட கன்னியப்பன் (வயது 37), பாலகுமார் (வயது 35), ரமேஷ் சிவா (வயது 33), பாலவினோத் குமார் (வயது 34), உள்ளிட்ட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
அதனைத் தொடர்ந்து, பா.ஜ.க. நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி, செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்தார். இந்நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி, அமர் பிரசாத் ரெட்டியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதன் அடுத்த கட்டமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்ய உள்ளதாக அமர் பிரசாத் ரெட்டி தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க:அடுத்தடுத்த வழக்குகள்..பேருந்தில் தொலைதூரப் பயணம்..!அமர்பிரசாத் ரெட்டியை அலறவிடும் காவல்துறை..பின்னணி என்ன?