செங்கல்பட்டு: மதுராந்தகம் பகுதியில் அமைந்துள்ளது, புகழ்பெற்ற ஏரிகாத்த ராமர் கோயில். இந்து அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் இந்த கோயில் புகழ்பெற்ற வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். சுகர், விபகண்டர் போன்ற தவம் புரிந்த இந்த திருத்தலம், மதுராந்தக சோழனால் அந்தணர்களுக்கு மானியமாக அளிக்கப்பட்ட இடம் என்கிறது வரலாறு.
அதே சமயம், ராமபிரான் இலங்கையில் இராவணனோடு போரிட்டு வெற்றி கொண்டு, சீதையை மீட்டுக் கொண்டு அயோத்தி திரும்பும் வழியில், மதுராந்தகத்தில் உள்ள இந்தத் திருத்தலத்தில் தம்பதி சமேதரராக தங்கினார் என்கிறது, புராணம்.
1795 - 98 காலகட்டத்தில், இப்பகுதியில் பெய்த பெருமழை காரணமாக ஏரி உடையும் நிலை ஏற்பட்டதாக தெரிகிறது. அப்போது இங்கு நிர்வாகத்தைக் கவனித்து வந்த கர்னல் பிளேஸ் என்பவர் செய்வதறியாது திகைத்த போது, ஏரி உடையாமல் காத்தருளிய ராமபிரான், கர்னலின் கண்களுக்கும் ராமர் காட்சி அளித்தார் எனவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாகவே, மதுராந்தகம் கோதண்டராமர் 'ஏரிகாத்த ராமர்' என்ற புகழுடைய பெயரை அடைந்தார். இந்தக் கோயிலில் கடந்த 2006ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பின் தற்போது 18 வருடங்களுக்குப் பிறகு கும்பாபிஷேகம் செய்வதற்கான ஏற்பாடுகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருவதால் பக்தர்கள் பரவசத்தில் உள்ளனர்.