செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று குறைதீர் கூட்டம் நடைபெற்றது. அப்போது, மதுராந்தகம் அடுத்த ரெட்டிபாளையத்தைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண், தீக்குளிக்க முயற்சி செய்தார்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், லட்சுமி கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக, புறம்போக்கு இடத்தில் வசித்து வந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த பச்சையப்பன் என்பவரும், அந்த இடத்திற்கு உரிமை கொண்டாடி வந்துளளார். இதில் ஏற்பட்ட தகராறில், லட்சுமி தாக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இது குறித்து லட்சுமி, மேல்மருவத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தவுடன், மருத்துவமனையில் சான்றிதழ் பெற்றுவருமாறு, லட்சுமியிடம் காவல் துறையினர் கூறியதாகத் தெரிகிறது. இதனால் மருத்துவமனைக்குச் சென்று சான்றிதழ் வாங்க முயன்ற லட்சுமியிடம், அங்கிருந்த பெண் காவலர் ஒருவர் கையூட்டு கேட்டதாகக் கூறப்படுகிறது.
இதில் ஆத்திரமடைந்த லட்சுமி, இன்று குறைதீர் கூட்டத்தில் தீக்குளிக்க முயற்சி செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை மீட்ட காவல் துறையினர், செங்கல்பட்டு நகர காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
இதையும் படிங்க: கட்சிக்கு விசுவாசமா இருங்க? - நாராயணசாமி வேதனை