செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் இன்று(பிப்.8) நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வந்த சென்னை தரமணி பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் (59) என்பவர் திடீரென தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
இதைக்கண்ட, காவல்துறையினர் அவர் மீது தண்ணீரை ஊற்றி அவரை மீட்டு விசாரணை நடத்தினர். அதில், செய்யூர் தண்ணீர்பந்தல் பகுதியில் உள்ள கோயில் அனாதின ( யாருக்கும் உரிமையில்லா அரசு நிலம்) நிலத்தை தனியார் அடுக்குமாடி குடியிருப்பு நிறுவனத்திற்கு பட்டா வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு துறைகளில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் முதியவர் தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது.
தீக்குளிக்க முயன்ற வேல்முருகன் பேசியதாவது,"அரசு அலுவலகங்களில் வாய்மையே வெல்லும் என்று வெறும் பலகை மட்டும் வைக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலர்கள் கையூட்டு பெற்றுக் கொண்டு சமூக விரோதிகளுக்கு போலிபட்டா வழங்கியுள்ளனர்.
தீக்குளிக்க முயற்சி செய்த முதியவர் இது தொடர்பாக புகார் அளித்தால் சம்பந்தபட்ட அலுவலர்கள் அதன் மீது நடவடிக்கை எடுக்காமல், கையூட்டு பெறவே துடிக்கிறார்கள்" எனக் கூறினார். இதையடுத்து, அங்கு வந்த மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் தீக்குளிக்க முயன்ற வேல்முருகனை கைது செய்யும்படி காவல் துறையினருக்கு உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:பணத்தை தர மறுக்கும் மளிகை கடைக்காரர்: மதுரை ஆட்சியர் அலுவலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி!