செங்கல்பட்டு: அச்சிறுப்பாக்கம் அடுத்த அறப்பேடு என்ற இடத்தில் தண்டவாளங்களைப் பழுது நீக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிக்காக தண்டவாளங்கள் அமைக்கப் பயன்படுத்தும் சிமெண்ட் ஸ்லாப்புகள் போன்ற தளவாடங்களை ஏற்றிக் கொண்டு சரக்கு ரயில் ஒன்று வந்தது. அப்போது திடீரென சரக்கு ரயிலில் இருந்த ஸ்லீப்பர் கட்டைகள், சிமெண்ட் ஸ்லாப்புகள் போன்றவை சரிந்தன. அதன் பின்னர் அவற்றின் மீது சரக்கு ரயிலின் சக்கரம் ஏறியதால் ரயில் தடம் புரண்டது.
இதனால் அந்த மார்க்கத்தில் வந்து கொண்டிருந்த குருவாயூர் எக்ஸ்பிரஸ், பாண்டிச்சேரி ரயில், சோழன் எக்ஸ்பிரஸ் போன்ற ரயில்கள் வழியிலேயே நிறுத்தப்பட்டன. விழுப்புரத்தில் இருந்து கிரேன் வரவழைக்கப்பட்டு சரிந்த ஸ்லீப்பர் கட்டைகள், சிமெண்ட் ஸ்லாப்புகள் போன்றவை அகற்றப்பட்டன. பிறகு சரக்கு ரயிலின் சக்கரங்கள் பழுது நீக்கப்பட்டு மீண்டும் தண்டவாளத்தில் நிலை நிறுத்தப்பட்டு சரக்கு ரயில் புறப்பட்டு சென்றது.