செங்கல்பட்டு:புகழ்பெற்ற மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார்(82) மாரடைப்பால் இன்று (அக்.19) காலமானார். நெஞ்சு சளி காரணமாக சித்தர் பீடத்தின் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர், மாரடைப்பால் உயிரிழந்தார்.
செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவிய இவர், பெண்களை கோயில் கருவறைக்குள் சென்று வழிபட வைத்தது உள்ளிட்ட ஆன்மீக சீர்த்திருத்தங்களை மேற்கொண்டுள்ளார். ஆதிபராசக்தி தொண்டு நிறுவனம் மற்றும் கல்வி பண்பாட்டு அறக்கட்டளை மூலம் பல்வேறு சமூக சேவைகளை இவர் மேற்கொண்ட இவரை ஆதிபராசக்தி பக்தர்கள் 'அம்மா' எனப் பாசத்துடன் அழைத்து வந்தனர். இவரது சேவையை போற்றும் வகையில் மத்திய அரசு கடந்த 2019-ல் பங்காரு அடிகளாருக்கு 'பத்மஸ்ரீ விருது' வழங்கி கௌரவித்தது.
பங்காரு அடிகளார் மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழ்நாடு பாஜக தலைவர் கே.அண்ணாமலை, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், வி.கே.சசிகலா உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனரும், ஆதிபராசக்தி தொண்டு மருத்துவக் கல்வி மற்றும் பண்பாட்டு அறக்கட்டளையின் தலைவருமான பங்காரு அடிகளார், தனது 82-ஆவது வயதில் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். ஆசிரியராக பணியைத் தொடங்கிய பங்காரு அடிகளார், ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவி ஆன்மிக சேவையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு, கோயில் கருவறையில் பெண்களும் பூஜை செய்யலாம் என்பது உள்ளிட்ட பல சீர்திருத்தங்களை ஆன்மிகத்தில் செய்தவர். என எடப்பாடி பழனிசாமி தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.