செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டம், பொத்தேரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் டிப்பர் லாரி ஒன்று, இன்று காலை 9 மணி அளவில் அதிவேகமாக சென்று கொண்டிருந்துள்ளது. அசுர வேகத்தில் வந்த டிப்பர் லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. அப்போது அங்கிருந்த குறுக்குச்சாலையைக் கடக்க முயன்ற 3 இரு சக்கர வாகனங்களின் மீது அதிவேகமாக மோதியுள்ளது.
அந்த கோர விபத்தில், இரு சக்கர வாகனங்களில் வந்த 4 நபர்களும் தூக்கி வீசப்பட்டு, உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பின்னர் அவர்களை மோதிய அந்த டிப்பர் லாரி சாலை நடுவே உள்ள தடுப்புச் சுவரில் மோதி நின்றுள்ளது.
இந்த விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. மேலும் விபத்து குறித்து தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்போது விபத்தில் இறந்தவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கட்டுப்பாட்டை இழந்து கண்மூடித்தனமான வேகத்தில் சாலையில் வந்த லாரி மோதி, ஒரே நேரத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் நிவாரணம் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட காட்டுப்பாக்கம் ரயில்வே சந்திப்புக்கு எதிரில் இன்று காலை சென்னை நோக்கு வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து 3 இருசக்கர வாகனங்கள் மீது மோதியது.
எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட அந்த விபத்தில், நான்கு பேர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரை விபத்து நடந்த இடத்திற்குச் சென்று தேவையான மீட்பு நடவடிக்கைகளையும், மருத்துவ உதவிகளையும் விரைந்து மேற்கொள்ள கேட்டுக்கொண்டேன். மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதலையும், நிதியுதவியையும் வழங்குவதாக" அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: படிக்கட்டு இடிந்து விழுந்ததில் 2 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு!