செங்கல்பட்டு: மதுராந்தகம் வட்டம் சித்தாமூர் அடுத்துள்ள பேரம்பாக்கம் ஊராட்சியில் இருளர் குடியிருப்புப் பகுதியை சேர்ந்த வென்னியப்பன், அவரது மனைவி சந்திரா இருவரும் நேற்று முன்தினம் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் விற்பவர்களிடம் மதுவை வாங்கிக் குடித்துள்ளனர்.
இதில் கடுமையான பாதிப்புக்குள்ளான இருவரும் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்துனர். பின்னர் இந்த தகவலறிந்து வந்த சித்தாமூர் போலீசார் வென்னியப்பன் தம்பதியினர் உடல்களை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். அதைத் தொடர்ந்து, இவர்கள் போலி மதுபானம் அருந்தியதால் உயிரிழந்துள்ளனர் என்பது உறுதியானது.
நேற்று முன்தினம் இதே சித்தாமூர் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பெருங்கரணை பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி அவரது மனைவி அஞ்சலி மற்றும் மாமியார் வசந்தா ஆகிய மூன்று பேர் போலி மது வாங்கிக் குடித்துள்ளனர். இதில் மருமகன் சின்னத்தம்பி, மாமியார் வசந்தா ஆகிய இருவரும் உயிரிழந்தனர். சின்னத்தம்பியின் மனைவி அஞ்சலி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தொடர்ந்து போலியான கள்ளச் சாராயத்தைக் குடித்து 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. பின்னர் இது தொடர்பாக வடக்கு மண்டல ஐஜி கண்ணன் உத்தரவின் பெயரில், மேல்மருவத்தூர் ஆய்வாளர் பிரேம் ஆனந்த், சித்தாமூர் உதவி ஆய்வாளர் மோகனசுந்தரம், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு உதவி ஆய்வாளர் ரமேஷ் ஆகியோர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: ஓட்டுநரின் தூக்க கலக்கத்தால் கார் விபத்து: ராணிப்பேட்டையில் இரு சிறுமிகள் பலி!