செங்கல்பட்டு மாவட்டம், மகாபலிபுரம் அருகே உள்ள கொக்கிலமேடு கடற்கரைப் பகுதியில் தகர ட்ரம் ஒன்று மிதந்து வந்து கரை ஒதுங்கியது. அப்போது கடலுக்கு மீன் பிடிக்க செல்ல முயன்ற மீனவர்கள் தகர ட்ரம்மினை உடைத்து பார்த்தனர். அதில், சைனீஸ் டீ என அச்சிடப்பட்ட 78 பொட்டலங்கள் இருந்தன. உடனே அது குறித்து காவல் துறையினருக்கு மீனவர்கள் தகவல் தெரிவித்தனர்.
தகவலின்பேரில் கடலோரக் காவல் படை காவல் கண்காணிப்பாளர் சின்னசாமி தலைமையிலான காவல் துறையினர், அங்கு விரைந்து ட்ரம்மையும், அதிலிருந்த 78 பொட்டலங்களையும் கைப்பற்றினர். அந்த பண்டலின் கவரின் மேல் ‘ரீபைன்ட் சைனீஸ் டீ” என சீன மொழியிலும், ஆங்கிலத்திலும் அச்சடிக்கப்பட்டு இருந்தது. ஒரு பொட்டலத்தைப் பிரித்து சோதனை போட்டபோது, அதில் போதைப் பொருள் இருப்பதாக காவல் துறையினர் சந்தேகமடைந்தனர்.
இதையடுத்து, 78 பொட்டலங்களையும் போதைப் பொருள் தடுப்பு பிரிவு காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். அதன்பின், சென்னையில் உள்ள அறிவியல் ஆய்வகத்திற்கு சம்பந்தப்பட்ட பொட்டலங்களை அனுப்பி சோதனை செய்தனர். அதில், பொட்டலங்களில் இருந்தது உலகம் முழுவதும் தடைசெய்யப்பட்ட மெத்தாம்பிடைமின் என்ற உயர் ரக போதைப் பொருள் என்று தெரியவந்தது. கைப்பற்றப்பட்ட 78 கிலோ எடையுள்ள போதைப் பொருளின் மொத்த மதிப்பு ரூ. 230 கோடி என காவல் துறையினர் கணக்கிட்டனர்.
மகாபலிபுரம் கடலோரத்தில் கண்டெடுக்கப்பட்ட ரூ. 230 கோடி மதிப்புள்ள போதை பொருள் இது குறித்து போதைப் பொருள் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சந்தேகப்படும்படியான நபர்கள் கொக்கி மேடு பகுதியில் உலாவருகின்றனரா? என்று கண்காணித்து வருகின்றனர்.
இதையும் படிங்க:கல்லூரி மாணவி சுட்டுக் கொலை - இளைஞருக்கு போலிஸ் வலைவீச்சு