தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 22, 2019, 7:52 PM IST

Updated : Apr 22, 2019, 10:24 PM IST

ETV Bharat / state

அடிப்படை பிரச்னைகளுடன் இயங்கும் கூடங்குளம் அணுஉலை - வேல்முருகன் குற்றச்சாட்டு

சென்னை: அடிப்படை பிரச்னைகளுடன் இயங்ககூடிய கூடங்குளம் அணு உலை திட்டத்தை கைவிட வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

TVP leader velmurugan statement on koodankulam issue

இது குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘திருநெல்வேலி மாவட்டம் இடிந்தகரை கடலோரத்தில் அப்பகுதி மக்களின் எதிர்ப்பை மீறி, கூடங்குளம் அணு உலைத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இன்றுவரை அந்தப் போராட்டம் தொடர்கிறது.

இந்நிலையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் அணு உலையின் செயல்பாடு குறித்து விளக்கம் கோரி பூவுலகின் நண்பர்கள் அமைப்பு மனு அளித்துள்ளனர். அதில் கூடங்குளம் அணு உலையின் முதல் அலகு, 2013ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 47 முறை பழுதாகி நிறுத்தப்பட்டுள்ளது. இரண்டாவது அலகு, 2017ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 19 முறை பழுதாகி நிறுத்தப்பட்டுள்ளது என அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியானது.

அண்மையில் இந்திய அணுசக்தி கழகத்தின் தலைவரும் அணுசக்தித் துறையின் செயலருமான கமலேஷ் நில்கந்த் வியாஸ், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது கூடங்குளம் அணுவுலை அடிக்கடி நிறுத்தப்படுவது பற்றி அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “கூடங்குளம் அணுவுலை நிறுத்தம் எண்ணிக்கையானது வழக்கத்திற்கு மாறானதுதான்; அதில் தொடக்க நிலை அதாவது அடிப்படைப் பிரச்சனைகள் உள்ளன; அதனைச் சரிசெய்ய அணுமின்சக்தி கழகம் தீவிரமாக முயன்றுவருகிறது” என்று பதிலளித்தார்.

இப்படி கூடங்குளம் அணுவுலைகளில் “அடிப்படைப் பிரச்சனைகள்” இருப்பதை அணுசக்தி கழகத் தலைவரே ஒப்புக் கொண்டதன் மூலம், இடிந்தகரை மக்கள் மற்றும் பூவுலகின் நண்பர்கள் உள்ளிட்ட அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர் நீண்டகாலமாகக் கூறிவரும் குற்றச்சாட்டுகள் உண்மையாகின்றன.

எனவே சுதந்திரமான வல்லுநர் குழுவைக் கொண்டு கூடங்குளம் அணுவுலைகளை ஆய்வு செய்திட வேண்டும்; அதோடு, மேலும் பல அணுவுலைகளை அங்கு அமைக்கும் மோடியின் அணுவுலைப் பூங்கா திட்டத்தையும் கைவிட வேண்டும் என மத்திய, மாநில அரசுகளைக் கேட்டுக் கொள்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி” என்று குறிப்பிட்டுள்ளார்.

Last Updated : Apr 22, 2019, 10:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details