மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவில் என்.ஆர்.எஸ் மருத்துவக் கல்லூரியில் கடந்த ஜூன் 11ஆம் தேதி இளநிலை மருத்துவர் வன்முறையாளர்களால் தாக்கப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். இந்த தாக்குதலைக் கண்டித்து இந்திய மருத்துவ சங்கம் சார்பில் நாடு தழுவிய நிலையில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
தாக்குதலுக்குள்ளான மருத்துவர் இந்நிலையில், தமிழ்நாட்டில் நாளை காலை 6 மணி முதல் நாளை மறுநாள் காலை 6 மணி வரையில் மருத்துவச் சேவைகள் வழங்கப்படாது என இந்திய மருத்துவச் சங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய மருத்துவச் சங்கத்தின் மாநிலத் தலைவர் கனகசபாபதி வெளியிட்டுள்ள அறிக்கையில், கொல்கத்தாவில் நடந்த தாக்குதலில் நடுநிலை வகித்து வன்முறையாளர்களை கைது செய்ய வேண்டிய மேற்கு வங்க அரசு, மருத்துவர்களை மிரட்டும் வகையில் நடந்து கொண்டிருக்கிறது.
மருத்துவ மையங்களையும், மருத்துவ ஊழியர்களையும் பாதுகாக்க தேசிய அளவில் கடுமையான சட்டம் தேவை. மருத்துவ மையங்கள் பாதுகாக்கப்பட்ட இடங்களாக அறிவிக்கப்பட்டு அவற்றின் பாதுகாப்பை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். இத்தாக்குதலைக் கண்டித்து ஜூன் 17ஆம் தேதி காலை 6 மணி முதல் ஜூன் 18ஆம் தேதி 6 மணி வரை மருத்துவச் சேவைகளை நிறுத்த முடிவு செய்துள்ளது. மக்களின் நலன் கருதி அத்தியாவசிய மருத்துவச் சேவைகள் தொடரும். வெளி நோயாளிகள் பிரிவுகள் மட்டும் இயங்காது.
இந்திய மருத்துவர்கள் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை இது போன்ற வன்முறைகள் தொடர்ந்தால் நோயாளிகளுக்கு எதிர்மறையான விளைவுகள் உண்டாகும். மருத்துவ மையங்கள் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற வரும் நோயாளிகளையும் ஏற்றுக்கொள்ள தயக்கம் காட்டுவார்கள் என அதில் கூறப்பட்டுள்ளது.