தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொதுச்செயலாளர் மயில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த 2010ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதிக்குப் பிறகு ஆசிரியராக நியமனம் பெற்று ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு அவர்களின் குடும்பநலன் கருதி ஊதியத்தை நிறுத்தக்கூடாது.
சம்பளத்தை நிறுத்தினால் போராட்டம் வெடிக்கும் - ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி எச்சரிக்கை! - போராட்டம்
சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆயிரத்து 500 ஆசிரியர்களின் ஊதியத்தை நிறுத்தினால் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் வெடிக்கும் என ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவித்துள்ளது.

8 ஆண்டுகாலம் ஆசிரியர்களாகப் பணியாற்றிய பின்பு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்பதைக் காரணம் காட்டி அவர்களைப் பணிநீக்கம் செய்யப்போவதாக அச்சுறுத்துவது எந்த விதத்திலும் நியாயமற்ற செயல். இவர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாததற்கு தமிழக அரசு போதுமான அளவில் தகுதித்தேர்வை நடத்தாததும் ஒரு காரணமாகும். மேலும், இவர்கள் முறையான ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள். அரசு நடத்திய தேர்வில் வெற்றி பெற்று, அரசு வழங்கிய ஆசிரியர் பயிற்சி சான்றிதழ் பெற்றவர்கள். எனவே, தகுதித் தேர்விலிருந்து இவர்களுக்கு விலக்களித்து அவர்களது பணி நியமன நாள் முதல் பணி வரன்முறை செய்திட அரசு முன்வரவேண்டும்.
தமிழகம் முழுவதும் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் பள்ளிகளுடன் இணைந்த எல்.கே.ஜி, யூ.கே.ஜி. வகுப்புகளைக் 2019 - 20ம் கல்வியாண்டிலேயே துவங்கிட வேண்டும். அந்த வகுப்புகளில் இடைநிலை ஆசிரியர்களை நியமனம் செய்யாமல் பாண்டிச்சேரி ஆசிரியர் பயிற்சி முடித்து பல ஆண்டுகளாக வேலைவாய்ப்பிற்காகக் காத்திருக்கும் தகுதிவாய்ந்த ஆசிரியர்களை நியமனம் செய்திட வேண்டும். கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி கூட்டணி சார்பில் வரும் ஜூன் 7ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் அனைத்து வட்டார தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அதில் கூறியுள்ளார்.